டெல்லியில் ‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள் அவசர ஆலோசனை - ஸ்டாலின் பங்கேற்பாரா?!

 
இந்தியா கூட்டணி இண்டியா இந்தியா கூட்டணி இண்டியா

தேசிய அளவில் பாஜகவை அரசியல் ரீதியாக எதிர்கொள்வதற்கான அடுத்தகட்ட வியூகங்களை வகுப்பது குறித்து ஆலோசனை நடத்துவதற்காக, காங்கிரஸ் தலைமையிலான ‘இந்தியா’ (I.N.D.I.A) கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் அடுத்த வாரம் டெல்லியில் நடைபெறவுள்ளது.

பாஜகவின் அரசியல் நகர்வுகளைத் தேசிய அளவில் ஒருங்கிணைந்து எதிர்கொள்வது குறித்து விவாதிக்க, காங்கிரஸ் கட்சி இக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. அடுத்த வாரம் திங்கட்கிழமை நடைபெறவுள்ள இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கூட்டணிக் கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் மம்தா பானர்ஜி (தலைவர், அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ்), அகிலேஷ் யாதவ் (தலைவர், சமாஜ்வாதி கட்சி), ராகுல் காந்தி (மூத்த தலைவர், காங்கிரஸ்) பங்கேற்கின்றனர். பல தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளின் தலைவர்கள் இக்கூட்டத்தில் நேரில் கலந்துகொண்டு தங்களது கருத்துகளையும் ஆலோசனைகளையும் வழங்கவுள்ளனர்.

ஸ்டாலின்

மறுபுறம், தமிழகத்தில் தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு திமுக கூட்டணியில் பல்வேறு அரசியல் மாற்றங்களும் சலசலப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. இத்தகைய இக்கட்டான அரசியல் சூழலுக்கு மத்தியில், ‘இந்தியா’ கூட்டணியின் முக்கிய அங்கமாக இருக்கும் திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை இந்த டெல்லி கூட்டத்தில் பங்கேற்க வைப்பதற்கான தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூட்டணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மக்களவை மற்றும் மாநிலங்களவை கூட்டத்தொடர்களில் பாஜக அரசை கூட்டாக எதிர்கொள்வது, மாநில அளவிலான கூட்டணிகளைப் பலப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.