தமிழகம் நிராகரிப்பா? வடமாநிலங்களில் 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!
வடமாநிலங்களில் காலியாக உள்ள 3 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில், தமிழகத்தில் காலியாக இருக்கும் 7 தொகுதிகளுக்கான தேர்தல் தேதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இது அரசியல் வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஏப்ரல் 2026-ல் நடைபெற்ற தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தலுக்குப் பிறகு, பல்வேறு அரசியல் மாற்றங்களால் தற்போது 7 தொகுதிகள் காலியாக உள்ளன. தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதலமைச்சருமான விஜய், தான் போட்டியிட்டு வெற்றி பெற்ற பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் திருச்சி கிழக்குத் தொகுதியை மே 10 அன்று ராஜினாமா செய்தார்.

அதிமுகவில் இருந்து விலகி ஆளுங்கட்சியான தவெக-வில் இணைந்த அதிருப்தி எம்.எல்.ஏ-க்களான எஸ். ஜெயக்குமார் (பெருந்துறை), மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), பி. சத்யாபாமா (தாராபுரம்) மற்றும் இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்) ஆகியோர் தங்களது பதவிகளை மே மாத இறுதியில் ராஜினாமா செய்தனர். இவை தவிர வைரலிமலை (சி. விஜயபாஸ்கர் ஜூன் 16 அன்று ராஜினாமா) மற்றும் கரூர் (எம்.ஆர். விஜயபாஸ்கர் ஜூன் 29 அன்று ராஜினாமா) ஆகிய தொகுதிகளும் அண்மையில் காலியாகின.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951-ன் படி, ஒரு சட்டமன்றத் தொகுதி காலியான தேதியிலிருந்து 6 மாதங்களுக்குள் அங்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதியாகும். தமிழகத்தில் பெரும்பாலான தொகுதிகள் கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் தான் காலியாக அறிவிக்கப்பட்டன. இதனால் இத்தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த இன்னும் 5 மாதங்கள் வரை கால அவகாசம் உள்ளது. தேர்தல் தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், தமிழகத் தேர்தல் ஆணையம் இதற்கான ஆரம்பகட்டப் பணிகளைத் தொடங்கியுள்ளது.

தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், முதற்கட்டமாக காலியாக உள்ள ஐந்து தொகுதிகள் சார்ந்த செங்கல்பட்டு, திருச்சி, ஈரோடு, திருப்பூர் மற்றும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர்களுக்குக் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள், உதவித் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளின் விவரங்கள், வாக்காளர் எண்ணிக்கை போன்ற தரவுகளைச் சேகரித்துத் தயார் நிலையில் வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வட மாநிலங்களில் நீண்ட நாட்களாகக் காலியாக இருந்த தொகுதிகளுக்கு தற்போது முன்னுரிமை அளித்துத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்திற்கான இடைத்தேர்தல் அறிவிப்பு அடுத்த சில வாரங்களில் முறைப்படி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
