நீதி தேவதை கண் திறப்பாளா? கோவை கல்லூரி மாணவி வன்கொடுமை வழக்கில் இன்று தீர்ப்பு!
கோயம்புத்தூரை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உறைய வைத்த ஒரு கொடூரச் சம்பவம், இன்று அதன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கோவை பீளமேடு விமான நிலையத்தின் பின்புறம் நடந்த அந்தப் பயங்கரம், இன்று சட்டத்தின் முன் தீர்ப்பிற்காகக் காத்து நிற்கிறது.
அந்த நள்ளிரவுப் பயங்கரம் (நவம்பர் 2-3, 2025)
2025-ம் ஆண்டு நவம்பர் 2-ஆம் தேதி இரவு, 20 வயது மதிக்கத்தக்கக் கல்லூரி மாணவி தனது 25 வயது ஆண் நண்பருடன் கோவை விமான நிலையத்தின் பின்புறம் உள்ள பிருந்தாவன் நகர் பகுதியில் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அந்தத் தருணத்தில் அங்கு வந்த மூன்று பேர் கொண்ட கும்பல், கார் கதவைத் திறக்கச் சொல்லி மிரட்டியது. தடுத்த ஆண் நண்பரை அரிவாளால் வெட்டிச் சாய்த்துவிட்டு, மாணவியைத் தூக்கிச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர். அதிகாலை 4 மணி வரை நடந்த அந்தத் தேடுதல் வேட்டையில், ரத்தக் காயங்களுடன் தத்தளித்துக் கொண்டிருந்த மாணவியை மீட்டபோது தமிழகமே அதிர்ச்சியில் உறைந்தது.

போலீஸ் அதிரடியும் 'என்கவுண்டர்' கைதும்
இந்தக் கொடூரத்தைச் செய்தவர்கள் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சகோதரர்களான சதீஷ் (எ) கருப்பசாமி (30), கார்த்திக் (எ) காளீஸ்வரன் (21) மற்றும் அவர்களது உறவினர் மதுரையைச் சேர்ந்த குணா (எ) தவசி (20) என்பது சிசிடிவி காட்சிகள் மூலம் உறுதி செய்யப்பட்டது. இவர்கள் ஏற்கனவே கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய 'ஹிஸ்டரி ஷீட்டர்கள்'. துடியலூர் அருகே இவர்களைப் பிடிக்க முயன்றபோது, போலீசாரைத் தாக்கிவிட்டுத் தப்ப முயன்றதால், தற்காப்பிற்காக போலீசார் இவர்களைக் காலில் சுட்டுப் பிடித்தனர்.
மின்னல் வேக விசாரணை (பிப்ரவரி - மார்ச் 2026)
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் நேரடி உத்தரவின்படி, இந்த வழக்கில் மிக விரைவாகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. விசாரணைத் தொடக்கம் பிப்ரவரி 2ம் தேதி துவங்கிய நிலையில், பாதிக்கப்பட்ட மாணவி, அவரது நண்பர், 72 அரசுத் தரப்பு சாட்சிகள் விசாரிக்கப்பட்ட நிலையில், 111 முக்கிய ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டது.
வழக்கமாகப் பல ஆண்டுகள் நீடிக்கும் இத்தகைய வழக்குகளில், வெறும் 22 நாட்களில் அனைத்துத் தரப்பு வாதங்களையும் முடித்து, இன்று தீர்ப்பு வழங்கப்பட இருப்பது இந்திய நீதித்துறையில் ஒரு மைல்கல்லாகும்.

சட்டப்பிரிவுகளும் தண்டனை எதிர்பார்ப்பும்
குற்றவாளிகள் மீது பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ் கூட்டுப் பாலியல் வன்கொடுமை (பிரிவு 70(1)), கடத்தல், மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பிரிவுகளின் கீழ் அதிகபட்சமாகத் தூக்குத் தண்டனை அல்லது சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கச் சட்டத்தில் இடமுள்ளது.
இறுதி முடிவு: இன்று மதியம் 2:30 மணிக்கு
கோவை மகிளா நீதிமன்ற நீதிபதி (பொறுப்பு) வி. சுந்தர்ராஜ் இன்று மதியம் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை வழங்க உள்ளார். "குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் தண்டனை, இனி ஒருவன் பெண்ணைத் தவறான கண்ணோட்டத்துடன் பார்க்கவே அஞ்சும் வகையில் இருக்க வேண்டும்" என்பதே கோவை மக்களின் ஒருமித்த குரலாக உள்ளது.
