பாஜக கூட்டணியில் தவெக இணைகிறதா? அமித்ஷா ‘மெகா ஸ்கெட்ச்’ - 'வாட்ஸ்அப்' மீட்டிங்கில் விவாதிக்கப்பட்ட விஷயம்!
தமிழக அரசியல் களத்தில் தவெக மற்றும் அதன் தலைவர் விஜய் குறித்த விவாதங்கள் தற்போது அனல் பறக்கத் தொடங்கியுள்ளன. வரும் சட்டமன்றத் தேர்தல் தேதி இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், விஜய்யின் டெல்லி பயணம் மற்றும் தவெக-வின் கூட்டணி நிலைப்பாடு குறித்து அடுத்தடுத்து திருப்பங்களுடன் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று மதியம் தனி விமானம் மூலம் டெல்லி புறப்படுகிறார். கரூர் பிரச்சார விபத்து தொடர்பான சிபிஐ விசாரணைக்காக அவர் செல்வதாகத் தெரிந்தாலும், இந்தப் பயணத்தின் பின்னணியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இணைவதற்கான ரகசியப் பேச்சுவார்த்தைகள் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் பரபரப்பாகப் பேசுகின்றன.

கடந்த செப்டம்பர் மாதம் கரூரில் நடந்த தவெக பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. ஏற்கனவே ஜனவரி மாதம் இருமுறை விசாரணைக்கு ஆஜரான விஜய்க்கு, தற்போது மார்ச் 15-ம் தேதி டெல்லி சிபிஐ தலைமையகத்தில் ஆஜராகுமாறு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் விஜய்க்கு அளிக்கப்படும் இந்த அழுத்தம், அவரை பாஜக தலைமையிலான கூட்டணிக்கு இழுப்பதற்கான 'ஸ்கெட்ச்' என எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன.
நேற்று தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கட்சியின் மாவட்டச் செயலாளர்களுடன் அவசரமாக ஒரு ஆன்லைன் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். இக்கூட்டத்தில், "நாம் தனித்துப் போட்டியிடலாமா அல்லது கூட்டணி அமைக்கலாமா?" என்ற கேள்வி நேரடியாக முன்வைக்கப்பட்டது. பெரும்பாலானோர் "தலைவரின் முடிவே எங்கள் முடிவு" எனத் தெரிவித்தாலும், திமுகவை வீழ்த்த வலுவான கூட்டணி அவசியம் என ஒரு தரப்பினர் கருத்து தெரிவித்துள்ளனர். 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்த தவெக, இப்போது 'கூட்டணி' குறித்து விவாதிப்பது அக்கட்சியின் கொள்கையில் ஏற்பட்டுள்ள தளர்வைக் காட்டுகிறது.

ஆந்திர மாநிலத் துணை முதல்வர் பவன் கல்யாண், விஜய்யை என்டிஏ கூட்டணிக்குள் கொண்டு வருவதற்கான சமரச முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரிகிறது. தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணி இன்னும் உறுதியாகாத நிலையில், விஜய்யை ஒரு முக்கிய துருப்புச் சீட்டாகப் பயன்படுத்த அமித்ஷா விரும்புவதாகக் கூறப்படுகிறது. டெல்லியில் தங்கியிருக்கும் போது பாஜகவின் மேலிடத் தலைவர்களை விஜய் சந்திக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.
