தவெக எம்.எல்.ஏ-வுக்கு மயில் இறகு மாலை அணிவித்ததால் சர்ச்சை - நடவடிக்கை எடுக்குமா வனத்துறை?!

 
சேலம் தவெக எம்.எல்.ஏ. லட்சுமணன்

சேலம் மேற்கு தொகுதி தமிழக வெற்றிக் கழகச் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணனுக்கு, அவரது ஆதரவாளர்கள் மயில் இறகுகளால் ஆன மாலையை அணிவித்து வரவேற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மயில்கள் பாதுகாக்கப்பட்ட உயிரினமாக அறிவிக்கப்பட்டுள்ளன. இயற்கையாக உதிர்ந்த மயில் இறகுகளைச் சேகரிப்பது குற்றமில்லை என்றாலும், அவற்றை வணிக ரீதியாகப் பயன்படுத்தி மாலைகள் செய்வது, விற்பனை செய்வதும் வாங்குவதும் சட்டப்படி குற்றமாகும்.

இதே போன்று மயில் இறகுகளால் ஆன மாலைகளைப் பயன்படுத்தி ஊர்வலம் சென்றதற்காகக் கேரள மாநிலத்தில் வனத்துறையினரால் ஏற்கனவே பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பொதுவெளியில் மக்கள் பிரதிநிதி ஒருவருக்குச் சட்டத்திற்குப் புறம்பாக மயில் இறகு மாலை அணிவிக்கப்பட்ட சம்பவம் சமூக ஆர்வலர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாலை அணிவித்தவர்கள் மீது வனத்துறை சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.