இலவச ரேஷன் அரிசி 7 கிலோவாகக் குறைகிறதா? மத்திய அரசின் புதிய வரைவு மசோதாவால் அதிர்ச்சி!

 
ரேஷன் ஊழியர்

மத்திய அரசின் புதிய வரைவு மசோதா குறித்த தகவல்கள், ரேஷன் கார்டுதாரர்கள் மற்றும் ஏழை எளிய குடும்பங்கள் மத்தியில் புதிய விவாதத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. ஏழைக் குடும்பங்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த இலவச அரிசி விநியோக முறையில் புதிய மாற்றங்களைக் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டு வருவதாகத் தெரிகிறது.

தற்போதைய நடைமுறையின்படி, அந்தியோதயா அன்ன யோஜனா போன்ற திட்டங்களின் கீழ் ஏழைக் குடும்பங்களுக்கு மாதத்திற்கு 35 கிலோ இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், தற்பொழுது வெளியாகியுள்ள மத்திய அரசின் புதிய வரைவு மசோதாவின்படி, இந்த ஒட்டுமொத்த குடும்பத்திற்கான கணக்கு முறை மாற்றப்பட்டு, 'நபர் வாரி'  கணக்கீடு அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் அடிப்படையில், ஒரு குடும்பத்தில் உள்ள ஒரு நபருக்குத் தலா 7 கிலோ வீதம் அரிசி வழங்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ரேஷன் கடை

இந்த புதிய விதியில் உள்ள ஒரு குறிப்பிட்ட உச்சவரம்பு தான் தற்பொழுது முரண்பாடுகளைத் தோற்றுவித்துள்ளது. புதிய வரைவு திட்டத்தின்படி, ஒரு குடும்பத்திற்கு அதிகபட்சமாக 35 கிலோ மட்டுமே அரிசி வழங்கப்படும் என்ற உச்சவரம்பும்  நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதனால் 1 முதல் 3 நபர்கள் கொண்ட குடும்பங்களில் ஒரு நபருக்கு 7 கிலோ என்ற கணக்கின்படி, 1 முதல் 3 நபர்கள் மட்டுமே உள்ள சிறிய குடும்பங்களுக்கு மாதத்திற்கு 7 கிலோ முதல் 21 கிலோ வரை மட்டுமே இலவச அரிசி கிடைக்கும். இதன் காரணமாக, இவர்களுக்குக் கிடைத்து வந்த 35 கிலோ அரிசி அளவு பெருமளவில் குறையும்.

ரேஷன்

5 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கொண்ட குடும்பங்களில், ஒரு குடும்பத்தில் 5 நபர்கள் இருந்தால் 35 கிலோ கிடைக்கும். ஆனால், 6 அல்லது 7 நபர்கள் இருந்தாலும் அதிகபட்ச உச்சவரம்பு 35 கிலோ என்பதால், அதைத் தாண்டி கூடுதல் அரிசி கிடைக்காது.

குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் கணக்கில் கொண்டு அரிசி அளவைக் குறைக்கும் இந்த முரண்பாடான 'ஃபார்முலா' ஏழை மக்களின் உணவுப் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும் எனச் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஏற்கனவே நலிவடைந்த பிரிவினருக்கு வழங்கப்பட்டு வரும் உணவு தானியங்களின் அளவை சுருக்கும் வகையில் இந்த புதிய வரைவு மசோதா அமைந்துள்ளதாகக் கூறி, இதற்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பத் தொடங்கியுள்ளன.