"ஜனநாயகன் ரிலீஸ் சிக்கல் தீருமா? - நாளை மறுஆய்வுக்குழுவுக்கு ஸ்பெஷல் ஸ்கிரீனிங்!

 
ஜனநாயகன் ஜனநாயகன்

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன் நடித்துள்ள கடைசித் திரைப்படமாகக் கருதப்படும் 'ஜனநாயகன்', தணிக்கைச் சான்றிதழ் பெறுவதில் நிலவிய நீண்ட காலச் சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, நாளை மறுஆய்வுக்குழுவின் பார்வைக்குச் செல்லவுள்ளது.

கடந்த பொங்கல் பண்டிகைக்கே வெளியாக வேண்டிய இத்திரைப்படம், தணிக்கை வாரியத்தின் ஆட்சேபனைகளால் தள்ளிப்போனது. ஏற்கனவே கடந்த திங்கள்கிழமை அன்று மறுஆய்வுக்குழு இந்தப் படத்தைப் பார்த்துச் சான்றிதழ் வழங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தணிக்கைக்குழு உறுப்பினர்களில் ஒருவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், அந்த ஆய்வு கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது.

ஜனநாயகன்

தற்போது கிடைத்துள்ள தகவல்களின்படி, நாளை மறுஆய்வுக்குழு இந்தப் படத்தை முழுமையாகப் பார்த்துத் தணிக்கைச் சான்றிதழ் வழங்குவது குறித்து இறுதி முடிவு எடுக்கவுள்ளது. மத்திய திரைப்படத் தணிக்கை வாரியத்தின் இந்தக் குழு, படத்தில் சர்ச்சைக்குரியதாகக் கருதப்படும் காட்சிகள் அல்லது வசனங்களை நீக்கப் பரிந்துரைக்கலாம் அல்லது 'யு/ஏ' (U/A) சான்றிதழ் வழங்கிப் படத்தை வெளியிட அனுமதி அளிக்கலாம்.

ஜனநாயகன் விஜய்

நாளை தணிக்கைச் சான்றிதழ் கிடைத்துவிட்டால், 'ஜனநாயகன்' திரைப்படம் வரும் ஏப்ரல் மாத இறுதியில் அல்லது மே மாதத் தொடக்கத்தில் திரையரங்குகளில் வெளியாக அதிக வாய்ப்புள்ளது. குறிப்பாக, தமிழகச் சட்டமன்றத் தேர்தல்  முடிந்த கையோடு இந்தப் படத்தை ரிலீஸ் செய்யத் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். புரொடக்‌ஷன்ஸ் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.