"ரூ.1,000 நோட்டுகள் அடுத்த மாதம் 15ம் தேதி வெளியாகிறதா?” - மத்திய அரசு விளக்கம்!

 
1000

புதிய வடிவில் ரூ.1,000 நோட்டுகளை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட உள்ளதாகச் சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை என்றும், அதுபோன்ற எந்த திட்டமும் இல்லை என்றும் மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக விளக்கமளித்துள்ளது.

தஞ்சாவூர் பெரிய கோவில் கோபுரப் படம் பொறிக்கப்பட்ட மஞ்சள் நிறத்திலான புதிய 1,000 ரூபாய் நோட்டுகள் வரும் நவம்பர் 15-ஆம் தேதி முதல் புழக்கத்திற்கு வரவுள்ளதாகச் சில புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் இணையதளங்களில் வேகமாகப் பரவின.

கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது பழைய 1,000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் இது தொடர்பாகத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

புதிய ரூ.1,000 நோட்டுகளை வெளியிடுவது குறித்து இந்திய ரிசர்வ் வங்கி எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றும், பரவி வரும் படங்கள் அனைத்தும் போலி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், அரசு மற்றும் ரிசர்வ் வங்கி தரப்பில் இருந்து வெளியாகும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். தற்போது இந்தியாவில் ரூ.10, ரூ.20, ரூ.50, ரூ.100, ரூ.200 மற்றும் ரூ.500 ஆகிய 6 மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் மட்டுமே அதிகாரப்பூர்வமாகப் புழக்கத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.