ஈரான் - அமெரிக்கா போர் முடிவுக்கு வருமா? சனிக்கிழமை பேச்சுவார்த்தை - ட்ரம்ப் அறிவிப்பு!

 
ட்ரம்ப் ட்ரம்ப்

மேற்காசியாவில் கடந்த மூன்று வாரங்களாகப் புகையக் கூடிய அமெரிக்கா - ஈரான் இடையிலான போர் தற்போது ஒரு முக்கியமான திருப்புமுனையை எட்டியுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈரான் மீதான ராணுவத் தாக்குதல்களை 5 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளார்.

ஈரானின் அணு உலைகள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்போவதாக டிரம்ப் முன்பு 48 மணிநேரக் கெடு விதித்திருந்தார். ஆனால், ஈரானிடம் இருந்து பேச்சுவார்த்தைக்கான அழைப்பு வந்ததைத் தொடர்ந்து, அந்தத் தாக்குதல் திட்டத்தை 5 நாட்களுக்கு ஒத்திவைப்பதாக நேற்று அறிவித்தார். வரும் சனிக்கிழமை இந்த விவகாரத்தில் ஒரு முக்கிய உடன்படிக்கை ஏற்பட வாய்ப்புள்ளதாக அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா ஈரான்

உலகளாவிய கச்சா எண்ணெய் போக்குவரத்தில் 30% பங்கு வகிக்கும் ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியதால், சர்வதேசச் சந்தையில் எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது. "ஈரானுடன் விரைவில் உடன்படிக்கை ஏற்படும். ஹார்முஸ் நீரிணைப் பாதை விரைவில் திறக்கப்படும். அமெரிக்காவும் ஈரானும் இணைந்து அதன் பாதுகாப்பை உறுதி செய்வோம்" என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். இந்த அறிவிப்பு வெளியான உடனே சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை சுமார் 10% வரை குறைந்தது.

கடந்த பிப்ரவரி 28ம் தேதி அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து 'Operation Epic Fury' என்ற பெயரில் ஈரான் மீது அதிரடி வான்வழித் தாக்குதலைத் தொடங்கின. இதில் ஈரானின் முக்கிய ராணுவத் தளங்கள் மற்றும் அணுசக்தி மையங்கள் இலக்கு வைக்கப்பட்டன. ஈரானின் அப்போதைய உச்ச தலைவர் அலி கமேனி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்குப் பதிலடியாக ஈரான், இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது.

ஈரான் அணு

ட்ரம்ப் இதனை ஒரு 'போர்' என்று அழைக்காமல், ஈரானின் அணு ஆயுதப் பேராசையைத் தடுப்பதற்கான 'ராணுவ நடவடிக்கை' என்றே குறிப்பிடுகிறார். "ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிக்காது என்ற உத்தரவாதத்தை அளித்துள்ளது" என்றும் அவர் கூறியுள்ளார். இருப்பினும், ஈரான் தரப்பில் நேரடிப் பேச்சுவார்த்தைகள் நடப்பதைச் சில அதிகாரிகள் மறுத்து வருகின்றனர். துருக்கி மற்றும் எகிப்து போன்ற நாடுகள் இதில் தூதர்களாகச் செயல்பட்டு வருகின்றன. இந்த 5 நாள் போர் நிறுத்தம் என்பது ஒரு நிரந்தர அமைதிக்கான தொடக்கமா அல்லது அமெரிக்கா தனது அடுத்தகட்ட ராணுவ வியூகத்திற்காக எடுத்துக் கொண்ட கால அவகாசமா என்பது சனிக்கிழமை நடக்கவுள்ள பேச்சுவார்த்தைக்குப் பிறகே தெளிவாகும்.