3 கட்சிகளின் ஆதரவு இருந்தால் தான் விஜய் முதல்வராக பதவி ஏற்க முடியும்?!

 
விஜய் விஜய்

தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்பதில் தற்போது பெரும் அரசியல் இழுபறி நீடிக்கிறது. சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, அவர் ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையை நிரூபிக்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) ஆகிய மூன்று கட்சிகளின் ஆதரவு மிக அவசியமாகிறது. இந்த மூன்று கட்சிகளின் ஆதரவு இல்லாமல் விஜய்யால் ஆட்சி அமைக்கத் தேவையான 118 என்ற மேஜிக் எண்ணை எட்ட முடியாது என்ற சூழல் நிலவுகிறது.

திருமாவளவன் விஜய்

ஏற்கனவே காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ-க்கள் தவெக-விற்குத் தங்கள் ஆதரவை உறுதி செய்துள்ள நிலையில், மீதமுள்ள பலத்தைப் பெற இடதுசாரிகள் மற்றும் விசிகவின் நிலைப்பாடு தீர்க்கமான ஒன்றாக மாறியுள்ளது. இதற்காக அந்த மூன்று கட்சிகளிடமும் தவெக நிர்வாகிகள் நேரில் சென்று ஆதரவு கோரியுள்ளனர். இது தொடர்பாக விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ள நிலையில், தங்களின் இறுதி முடிவை அவை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் போராட்டம்

திமுக கூட்டணியில் நீண்டகாலமாக அங்கம் வகித்து வந்த இந்தக் கட்சிகள், இப்போது விஜய்யின் தவெக-விற்கு ஆதரவு அளிக்குமா அல்லது நடுநிலை வகிக்குமா என்பது தமிழக அரசியலின் அடுத்தகட்ட நகர்வைத் தீர்மானிக்கும். தற்போதைய சூழலில், இந்தக் கட்சிகளின் ஆதரவைப் பெறத் தவறும் பட்சத்தில் விஜய்யின் முதல்வர் கனவு தள்ளிப்போகக்கூடும் என்பதால் இன்றைய அறிவிப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.