விஜய்க்கு கூடும் கூட்டம் வாக்குகளாக மாறுமா? - பெண்களின் 'பளீச்' பதில்கள்!

 
தவெக விஜய்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வேலூரில் இன்று நடத்திய மாநாட்டிற்கு வந்திருந்த பெண்களிடம், "கூட்டமாக வரும் மக்கள் விஜய்க்கு வாக்குகளாக மாறுவார்களா?" என்ற கேள்வியுடன் நடத்திய நேர்காணல் சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

விஜய்யின் பேச்சைக் கேட்கத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பெண்கள் வேலூரில் குவிந்தனர். அவர்களிடம் நடத்திய உரையாடல்களில், நேர்காணலில் பங்கேற்ற பெரும்பாலான பெண்கள், "நாங்கள் வெறும் கூட்டத்திற்காக வரவில்லை, மாற்றத்திற்காக வந்திருக்கிறோம். எங்கள் வீட்டுப் பிள்ளையாக விஜய்யைப் பார்க்கிறோம். எங்கள் வீட்டில் உள்ள 5 முதல் 8 வாக்குகள் வரை அனைத்தும் இந்த முறை 'விசில்' சின்னத்திற்குத் தான்" என்று உறுதியாகத் தெரிவித்தனர்.

தவெக விஜய்

"தற்போது வழங்கப்படும் 1,000 அல்லது 5,000 ரூபாய் உரிமைத் தொகை மட்டும் போதாது; எங்களுக்குத் தேவையானது பாதுகாப்பு மற்றும் சுயமரியாதை. அதனை விஜய் நிச்சயம் தருவார் என நம்புகிறோம்" என்று நெல்லை மற்றும் மதுரையில் இருந்து வந்திருந்த பெண்கள் கருத்து தெரிவித்தனர்.

"காலங்காலமாக இரு கட்சிகளுக்கே வாக்கு செலுத்தி வருகிறோம். இந்த முறை ஒரு புதிய மாற்றத்தை விரும்புகிறோம். விஜய் பேசும் 'குட்டி கதை'களில் ஒரு உண்மை இருக்கிறது. அவர் சொன்னது போல அந்த 'சின்னப் பையன்' தான் எங்கள் எதிர்காலம்" எனப் பல தாய்மார்கள் நெகிழ்ச்சியுடன் கூறினர்.

கூட்டத்திற்கு வந்திருந்த இளைஞர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் காணப்பட்ட எழுச்சி, வெறும் சினிமா ரசிகர்களின் ஆரவாரம் மட்டுமல்ல, அது ஒரு அரசியல் மாற்றத்திற்கான அடித்தளம் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். வேலூர் மாநாட்டில் விஜய் உணர்ச்சிவசப்பட்டுக் கண்கலங்கியது, வந்திருந்த பெண்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதை இந்த நேர்காணல் உறுதிப்படுத்துகிறது. விஜய்யின் இந்த 'மக்கள் சக்தி' வரும் ஏப்ரல் தேர்தலில் வாக்குகளாக அறுவடை செய்யப்படுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.