விஜய் ஆட்சி தப்புமா? ஆதரவை வாபஸ் பெறும் இடதுசாரிகள்... அதிமுக அதிருப்தியாளர்களுக்கு அமைச்சர் பதவியா?!
தமிழக அமைச்சரவை விரிவாக்கத்தில் அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏ-க்களுக்குப் பிரதிநிதித்துவம் வழங்க முதலமைச்சர் விஜய் திட்டமிட்டுள்ளதால், த.வெ.க அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெற நேரிடும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) பகிரங்கமாக எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு அமைந்து, கடந்த மே 13 அன்று சட்டமன்றத்தில் நம்பிக்கைத் தீர்மானமும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து, காலியாக உள்ள துறைகளை நிரப்புவதற்காக நாளை (மே 21) அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

இந்த விரிவாக்கத்தில், த.வெ.க அரசை ஆதரிக்கும் அதிமுக பிளவு குழுவைச் சேர்ந்த எஸ்பி வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. இந்த அதிரடி நகர்வுக்குத் த.வெ.க கூட்டணியில் உள்ள இடதுசாரிகள் மற்றும் கூட்டணிக் கட்சிகள் மத்தியில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
கொள்கை ரீதியாக முரண்பட்ட அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏ-க்களை அமைச்சரவையில் சேர்ப்பதற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, "அதிமுக அதிருப்தியாளர்களை அமைச்சரவையில் சேர்த்தால், அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெற நேரிடும்" என எச்சரித்துள்ளது.
இடதுசாரிகளின் இந்த திடீர் நிலைப்பாட்டைத் தொடர்ந்து, கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ), விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) மற்றும் ஐயூஎம்எல் ஆகிய 4 கட்சிகளும் த.வெ.க அரசுக்கு அளித்து வரும் தங்களின் ஆதரவை ஒட்டுமொத்தமாக விலக்கிக் கொள்ளும் முடிவை எடுக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இதனால் புதிய அரசு அமைந்த சில நாட்களிலேயே கூட்டணிக்குள் பெரிய விரிசல் ஏற்பட்டுள்ளது.

சட்டமன்றத்தில் தற்போதைய பலத்தின்படி, த.வெ.க அரசுக்கு த.வெ.க-வின் 106 எம்.எல்.ஏ-க்கள், காங்கிரஸின் 5, சிபிஐ 2, சிபிஎம் 2, விசிக 2, ஐயூஎம்எல் 2 மற்றும் அதிமுக அதிருப்தி குழுவின் 25 பேர் என மொத்தம் 144 எம்.எல்.ஏ-க்களின் பலம் உள்ளது.
ஒருவேளை சிபிஎம், சிபிஐ, விசிக, ஐயூஎம்எல் ஆகிய 4 கட்சிகளும் தங்களின் ஆதரவை முழுமையாக விலக்கிக் கொண்டாலும், த.வெ.க அரசுக்கு 8 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு மட்டுமே குறையும். இதனால் கூட்டணியின் பலம் 136 ஆக மாறும். ஆட்சி நீடிப்பதற்கான பெரும்பான்மைக்கு 118 எம்.எல்.ஏ-க்கள் மட்டுமே போதும் என்பதால், காங்கிரஸின் 5 மற்றும் அதிமுக அதிருப்தி குழுவின் 25 எம்.எல்.ஏ-க்களின் உறுதியான ஆதரவோடு முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க ஆட்சிக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படாது, அரசு ஸ்திரமாகவே நீடிக்கும் என அரசியல் விமர்சகர்கள் கணித்துள்ளனர்.
