“தலைமுடி பிரச்சினைக்கு கூடவா ஐகோர்ட்டுக்கு வருவீங்க?” - பிரியதர்ஷினி மனுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!
நேர்த்திக்கடனுக்காகச் சிறையில் உள்ள தனது கணவர் தலைமுடி வளர்க்க அனுமதி கோரிப் பெண் ஒருவர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், "தலைமுடி வளர்க்கும் பிரச்சினைக்கு கூடவா ஐகோர்ட்டுக்கு வருவீர்கள்?" எனக் கேள்வி எழுப்பி வழக்கை முடித்து வைத்தது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரியதர்ஷினி என்பவர் தாக்கல் செய்த மனுவில், "போதைப்பொருள் கடத்தல் வழக்கில் எனது கணவர் சுதர்சன் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். எனக்கு கடந்த அக்டோபர் 17-ம் தேதி குழந்தை பிறந்தது. எங்களது குடும்ப வழக்கப்படி திருச்செந்தூர் முருகன் கோயிலில் முடி காணிக்கை செலுத்த வேண்டும். இதற்காக சிறையில் உள்ள எனது கணவர் தலைமுடி, தாடி, மீசையை எடுக்காமல் வளர்த்து வந்தார்" எனத் தெரிவித்திருந்தார்.

சிறைத்துறை அதிகாரிகள் அதற்கு அனுமதி அளிக்கவில்லை என்றும், நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக தலைமுடி வளர்க்க கணவருக்கு விதிவிலக்கு அளிக்க கோரி கடந்த 13-ம் தேதி அளித்த மனு பரிசீலிக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, சிறைத்துறை தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் எஸ்.யோகராஜ சேகர், "உடல்நலப் பிரச்சினைகள் இருந்தால் தான் முடிவெட்டுவதைக் கட்டாயம் எனக் கூறுவோம். மனுதாரர் கணவர் விவகாரத்தில் அதுபோன்ற உத்தரவு எதையும் கடலூர் சிறைத்துறைக் கண்காணிப்பாளர் பிறப்பிக்கவில்லை" எனத் தெரிவித்தார்.
இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி வி.லட்சுமிநாராயணன், "தலைமுடி வளர்க்கும் பிரச்சினைக்கு கூடவா ஐகோர்ட்டுக்கு வருவீர்கள்?" எனக் கேள்வி எழுப்பி வழக்கை முடித்து வைத்தார்.
