திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியா? “வாழ்க்கையில் முக்கியமான திருப்பம்... ஜூன் 11ல் சொல்றேன்” - நடிகர் லாரன்ஸ் பரபரப்பு!
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தான் போட்டியிடப் போவதாகப் பரவி வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், நடிகரும் சமூக ஆர்வலருமான ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பரபரப்புப் பதிவு, தமிழக அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் காட்டுத்தீயாய் விவாதங்களைக் கிளப்பியுள்ளது.
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, திருச்சி கிழக்கு தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் வரவுள்ளது. இந்தத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆதரவோடு ராகவா லாரன்ஸ் களம் இறங்கப் போவதாகப் பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வந்தன.
Hi everyone, News about me contesting in Trichy East election has been circulating across various media platforms.
— Raghava Lawrence (@offl_Lawrence) June 7, 2026
All my Media friends have been reaching out to me over phone and requesting to meet me asking for clarification. Since the speculation has grown to a point where I… pic.twitter.com/68ZyN6P0l9
இது குறித்து ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள பதிவில், "திருச்சி கிழக்கு தொகுதி தேர்தலில் நான் போட்டியிடப் போவதாகப் பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. இது குறித்து பலரும் என்னைத் தொடர்புகொண்டு விளக்கம் கேட்கிறார்கள். இந்த வதந்திகளும் ஊகங்களும் ஒரு குறிப்பிட்ட எல்லையைத் தாண்டிவிட்டதால், அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது அவசியம் என்று கருதுகிறேன்."
தற்போது லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கும் 'பென்ஸ்' திரைப்படத்தின் படப்பிடிப்பில் முழுமையாக ஈடுபட்டு இருப்பதாகவும், அந்தப் படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் வரும் ஜூன் 10-ம் தேதியுடன் நிறைவடைய உள்ளதாகவும் லாரன்ஸ் தெளிவுபடுத்தியுள்ளார்.
படப்பிடிப்பு முடிந்த அடுத்த நாளே தனது வாழ்வின் மிக முக்கியமான முடிவை அறிவிக்கப் போவதாகக் கூறி லாரன்ஸ் ரசிகர்களுக்குப் பெரிய 'சஸ்பென்ஸ்' வைத்துள்ளார்.
"எனது தாயாரின் ஆசியுடன், எனது வாழ்க்கையின் மிக முக்கியமான முடிவு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் ஜூன் 11-ம் தேதி வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு வெளியாகும்" என்று அவர் பதிவிட்டுள்ளார். இதனால் அவர் தவெக கட்சியில் முறைப்படி இணையப் போகிறாரா? அல்லது முழு நேர அரசியலில் இறங்கப் போகிறாரா? என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட்ட தவெக தலைவர் ஜோசப் விஜய், இரண்டு இடங்களிலுமே இமாலய வெற்றி பெற்றார். சட்ட விதிகளின்படி ஒரு நபர் இரு தொகுதிகளில் எம்.எல்.ஏ-வாக நீடிக்க முடியாது என்பதால், அவர் தனது திருச்சி கிழக்கு தொகுதி பதவியை ராஜினாமா செய்தார்.
இதனைத் தொடர்ந்து அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு, வரும் நவம்பர் மாதத்திற்குள் அங்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். இந்தச் சூழலில் தான், தவெக சார்பில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் அல்லது நடிகர் ராகவா லாரன்ஸ் போட்டியிடலாம் எனப் பேசப்பட்டு வந்தது. தற்பொழுது லாரன்ஸின் இந்த ஜூன் 11 அறிவிப்பு, திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களத்தை இப்போதே சூடாக்கியுள்ளது.
