ட்வின்ஸ் பிறந்தால் 2 தங்க மோதிரங்கள் கிடைக்குமா? "தாய்மாமன்’மோதிரத் திட்டத்தில் யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? என்னென்ன ஆவணங்கள் தேவை?! - அரசு விளக்கம்

 
மோதிரம்

தமிழக அரசு புதிதாக அறிவித்துள்ள "தாய்மாமன் தங்க மோதிரத் திட்டத்தின்" கீழ், ஒரே பிரசவத்தில் இரட்டைக் குழந்தைகள் பிறந்தால் தனித்தனியாக இரண்டு மோதிரங்கள் வழங்கப்படுமா என்ற பொதுமக்களின் சந்தேகத்திற்குத் தமிழக அரசு விரிவான விளக்கமளித்துள்ளது.

அரசு வெளியிட்டுள்ள விளக்கத்தின்படி, ஒரே நேரத்தில் பிறக்கும் இரட்டைக் குழந்தைகளுக்குத் தனித்தனியாகத் தலா ஒரு கிராம் தங்க மோதிரம் வீதம் மொத்தம் 2 கிராம் தங்க மோதிரங்கள் வழங்கப்படும்.

தாய்மாமன் தங்க மோதிரம்

இத்திட்டத்தில் கூடுதல் பிரசவங்களுக்கும் (இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள்) எந்தவொரு தடையுமின்றி, எத்தனை குழந்தைகள் பிறக்கிறதோ அத்தனை குழந்தைகளுக்கும் தனித்தனியாக மோதிரங்கள் வழங்க அரசாணையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பிறக்கும் குழந்தை ஆண் குழந்தையாக இருந்தாலும், பெண் குழந்தையாக இருந்தாலும் பாலினப் பாகுபாடின்றி அனைவருக்கும் இத்திட்டம் சமமாகப் பொருந்தும். கர்ப்பிணித் தாய்மார்கள் கண்டிப்பாகத் தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிரசவித்திருக்க வேண்டும். பயனாளியான தாய் கண்டிப்பாக RCH ID உடன் PICME மென்பொருளில் பதிவு செய்திருப்பது அவசியமாகும்.

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்

விண்ணப்பதாரர் கண்டிப்பாகத் தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும். பயனாளிகள் தங்களின் இருப்பிடத்தை உறுதி செய்ய குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, இருப்பிடச் சான்றிதழ், அடையாள அட்டை (ஆதார் கார்டு / தொழிலாளர் நல வாரிய அட்டை), அஞ்சல் துறையால் வழங்கப்பட்ட முகவரிச் சான்று அட்டை ஆகிய ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைச் சமர்ப்பிக்க வேண்டும்.

அரசு மருத்துவமனைகளில் கடந்த 22 ஜூன் 2026 முதல் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறத் தகுதியுடையவர்கள் ஆவர். இத்திட்டமானது, பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15, 2026 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் முறைப்படி தொடங்கி வைக்கப்பட உள்ளது. இத்திட்டத்திற்காகத் தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் 755.83 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.