“தவெக-வை அழைக்காமல் 1 சீட்டு பாஜகவை அழைப்பீங்களா?" - ஆளுநருக்கு ஜோதிமணி எம்பி சரமாரி கேள்வி!
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகிப் பல நாட்கள் கடந்தும், ஆட்சி அமைப்பதில் நிலவும் முட்டுக்கட்டை குறித்து காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தனது எக்ஸ் தளத்தில் ஆவேசமான பதிவை வெளியிட்டுள்ளார். ஆளுநர் ஆர்.வி. அர்லேக்கரின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்துள்ள ஜோதிமணி, தனது பதிவில், "தமிழகத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றித் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தை (தவெக) ஆட்சி அமைக்க அழைக்காமல் ஆளுநர் தாமதம் செய்வது ஏன்? இது தமிழக மக்களின் தீர்ப்பை அவமதிக்கும் செயலாகும்."

"108 இடங்கள் பெற்ற விஜய்யை அழைக்காத ஆளுநர், வெறும் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள பாஜக-வை ஆட்சி அமைக்க அழைக்க முடியுமா? ஒரு இடத்தில் வென்றவர்களுக்காகவா இந்தத் தாமதம்?" என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக மக்களின் தெளிவான தீர்ப்பை மாற்றி எழுத மத்திய அரசு முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். "பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் அழுத்தத்திற்குப் பணிந்து ஆளுநர் செயல்படக் கூடாது. தமிழக மக்களின் விருப்பத்திற்கு மதிப்பளித்து, பெரும்பான்மை பெற்றுள்ள தவெக-விற்கு உடனடியாக ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க வேண்டும்" என அவர் வலியுறுத்தியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ-க்கள் ஏற்கனவே தவெக-விற்கு ஆதரவுக் கடிதம் அளித்துள்ள நிலையில், அக்கட்சியின் எம்பி-யான ஜோதிமணி தற்போது வெளிப்படையாகத் தவெக-விற்கு ஆதரவாகவும், ஆளுநருக்கு எதிராகவும் களமிறங்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் உற்று நோக்கப்படுகிறது.
