3 மாத வாடகை பாக்கிக்காகப் பெண், குழந்தைகளை வீட்டை விட்டுத் துரத்திய உரிமையாளர் - கோவையில் கொடூரம்!

 
பிளாட்பாரம் நடைப்பாதை நாடோடி

கோயம்புத்தூரில் மனிதநேயமற்ற முறையில் 3 மாத வாடகை பாக்கிக்காக ஒரு பெண்ணையும் அவரது இரு குழந்தைகளையும் வீட்டின் உரிமையாளர் நடுரோட்டில் தூக்கி வீசியுள்ள கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கோவை ஆவாரம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்கப் பெண் ஒருவர், தனது இரண்டு குழந்தைகளுடன் அப்பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். அண்மைக்காலமாக ஏற்பட்ட குடும்ப மற்றும் பொருளாதாரச் சூழ்நிலை காரணமாக, கடந்த 3 மாதங்களாக அவரால் வீட்டு வாடகையை முறையாகச் செலுத்த முடியாமல் போனதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வீட்டின் உரிமையாளர், அந்தப் பெண்ணிடம் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி அவரது வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தையும் வீதிக்குத் தூக்கி வீசியுள்ளார்.

வீடு குடிவரும்போது அந்தப் பெண் கொடுத்த ரூ.30,000 அட்வான்ஸ் தொகையையும் திருப்பித் தராமல், அந்தப் பெண்ணையும் அவரது இரு பிஞ்சுப் பிள்ளைகளையும் வீட்டை விட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றியுள்ளார். நிர்க்கதியாய் நின்ற அந்தப் பெண், தங்களுக்குத் தங்குவதற்கு வேறு இடம் ஏதும் இல்லாததால், தனது இரண்டு குழந்தைகளுடன் அப்பகுதியில் உள்ள ஒரு மேம்பாலத்தின் கீழ் தஞ்சம் புகுந்துள்ளார். கொட்டும் மழையிலும், வெயிலிலும் பாதுகாப்பற்ற முறையில் தாயும் குழந்தைகளும் சாலையோரம் அமர்ந்திருக்கும் இந்த மிகக் கொடூரமான காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.

இக்காட்சிகளைக் கண்ட பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும், அந்த வீட்டின் உரிமையாளரின் அராஜகப் போக்கிற்குத் தங்களின் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

தமிழகத்தின் முக்கிய மாநகரமான கோவையில் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரமும், பாதுகாப்பும் கேள்விக்குறியாகி வரும் இத்தகைய சம்பவங்கள் குறித்து மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் உடனடியாகத் தலையிட்டு அந்தப் பெண்ணிற்கு உரிய நீதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.