லேடீஸ் ஹாஸ்டலில் காதலனின் உதவியுடன் தங்கச் செயின் பறித்த இளம்பெண் கைது!

 
திருட்டு

சென்னை ராமாபுரத்தில் இயங்கி வரும் தனியார் மகளிர் விடுதியில் தங்கியிருந்த இளம்பெண்ணிடம் தங்கச் சங்கிலியைத் திருடிய வழக்கில், தலைமறைவாக இருந்த பெண்ணை ராயலா நகர் போலீசார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

முன்னதாக இச்சம்பவத்தில் தொடர்புடைய அவரது காதலனைச் சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் போலீசார் கைது செய்திருந்த நிலையில், தற்பொழுது முக்கிய குற்றவாளியான காதலியும் சிக்கியுள்ளார்.

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயதான சிவரஞ்சினி என்ற இளம்பெண், சென்னை ராமாபுரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கித் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சிவரஞ்சினி விடுதி அறையில் நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்தபோது, முகமூடி அணிந்த நபர் ஒருவன் நைஸாக அறைக்குள் புகுந்து அவர் கழுத்தில் அணிந்திருந்த 6 கிராம் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி ஓடினான். திடுக்கிட்டு எழுந்த சிவரஞ்சினி கூச்சலிட்ட போதிலும், அந்த நபர் தப்பிச் சென்றுவிட்டான்.

போலீசார் காவல் ஜீப் விசாரணை கொலை கைது பாலியல் பலாத்காரம் நீட்டிப்பு தப்பியோட்டம் கைதி

இது குறித்துச் சிவரஞ்சினி அளித்த புகாரின் பேரில், ராயலா நகர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விடுதி வளாகம் மற்றும் அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, சந்தேகத்திற்கிடமாக நடமாடிய நபர் சின்ன போரூர் பகுதியைச் சேர்ந்த தனசேகர் (25) என்பது தெரியவந்தது.

உடனடியாகத் தனசேகரைக் கைது செய்து நடத்திய தீவிர விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. தனசேகரின் காதலி ராதிகா (24) என்பவர்தான் இந்தத் திருட்டுக்கு முழு மாஸ்டர் பிளானையும் போட்டுக் கொடுத்துள்ளார். விடுதியின் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் பெண்கள் தூங்கும் நேரத்தைக் கணித்து, காதலன் தனசேகரை அனுப்பி நகையைத் திருட வைத்ததை அவர் ஒப்புக்கொண்டார்.

கைது

காதலன் தனசேகரை ஏற்கனவே கைது செய்த போலீசார், தலைமறைவாக இருந்த காதலி ராதிகாவையும் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில், தனிப்படை போலீசார் ரகசியத் தகவலின் பேரில் ராதிகாவை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட ராதிகாவிடம் இருந்து திருடப்பட்ட தங்கச் சங்கிலி மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, ராதிகாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் அவரைப் புழல் பெண் சிறையில் அடைத்தனர். விடுதியில் நடந்த இந்தத் திருட்டுச் சம்பவம் அப்பகுதியில் உள்ள பெண்கள் விடுதிகளின் பாதுகாப்பை மீண்டும் கேள்விக்குறியாக்கியுள்ளது.