அரசு மருத்துவமனை மூதாட்டியை எலி கடித்த விவகாரம் - 7 நாட்களுக்குள் பதிலளிக்க நோட்டீஸ்!
திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 68 வயது மூதாட்டியை எலி கடித்த அதிர்ச்சி சம்பவம் தொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குனரகம் விளக்கம் அளித்துள்ளது. இச்சம்பவம் குறித்து மருத்துவக் கல்வி இயக்குனரகம் மற்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ள தகவல்களின்படி, மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த 68 வயது மூதாட்டிக்குக் கடுமையான சர்க்கரை நோய் பாதிப்பு இருந்தது. இதனால் அவரது கால்களில் உணர்ச்சி இல்லாமல் இருந்துள்ளது. எலி கடித்ததைத் தொடர்ந்து அவருக்கு உடனடியாகத் தேவையான அனைத்து சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு, தற்போது அவர் நலமுடன் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனையின் வார்டு பகுதி மிகவும் பழமையான கட்டிடம் என்பதால், ஆங்காங்கே எலி வளைகள் உருவானதே இச்சம்பவத்திற்குக் காரணம் என மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. சம்பவத்தைத் தொடர்ந்து பராமரிப்புப் பணிகளில் ஏற்பட்டுள்ள மெத்தனப்போக்கு குறித்து விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன:
திருச்சி அரசு மருத்துவமனையில் தூய்மை மற்றும் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டு வரும் ஒப்பந்த தனியார் நிறுவனத்திற்குக் காராணம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. எலித் தொல்லையைக் கட்டுப்படுத்தத் தவறியது ஏன் என்பது குறித்து வரும் 7 நாட்களுக்குள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என அந்த நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
