கள்ளத்தொடர்பால் விவகாரம்... கணவர் மற்றும் சொந்த அக்காவை உயிரோடு எரித்துக் கொன்ற பெண்!

 
எரித்து கொலை எரித்து கொலை

 

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள பின்னவாசல் கிராமத்தில் வசித்து வந்த 60 வயதான சிதம்பரம் என்பவர் சோப்பு பவுடர் வியாபாரம் செய்து வந்தார். இவரது வீட்டில் 50 வயதான மனைவி அமுதாவுடன், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கணவரை இழந்த அமுதாவின் மூத்த அக்கா கண்ணம்மாவும் வந்து தங்கியுள்ளார். ஒரே வீட்டில் வசித்து வந்த நிலையில் கணவர் சிதம்பரத்திற்கும், அக்கா கண்ணம்மாவிற்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஆம்புலன்ஸ்

இந்த முறையற்ற உறவு காரணமாக இருவரும் சேர்ந்து அமுதாவிற்கு அடிக்கடி கடுமையான தொல்லை கொடுத்து வந்ததாகத் தெரிகிறது. இதனால் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனையிலும் ஆத்திரத்திலும் அமுதா இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணி அளவில் சிதம்பரமும், கண்ணம்மாவும் வீட்டில் ஒன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தபோது வீட்டின் ஜன்னல் வழியாக அமுதா பெட்ரோலை ஊற்றித் தீ வைத்துள்ளார்.

உடலில் தீப்பற்றி எரிந்ததால் இருவரும் அலறிய சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்து அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர். தீ வைக்கும் போது அமுதாவின் கைகளிலும் காயம் ஏற்பட்டதால் அவரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பேராவூரணி போலீசார் அவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.