கணவர் பேச மறுத்து, செல்போன் நம்பரை ப்ளாக் செய்ததால் புதுப்பெண் தற்கொலை!

 
திருமணம் திருமணம்

சென்னை வேளச்சேரி பகுதியில் குடும்பத் தகராறு காரணமாகக் கணவர் தன்னுடன் பேச மறுத்து, செல்போன் எண்ணையும் பிளாக்  செய்ததால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான 23 வயது இளம் இல்லத்தரசி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வேளச்சேரியைச் சேர்ந்தவர் ரஞ்சிதா (23). இவருக்கும் சென்னை கிண்டி பகுதியைச் சேர்ந்த குமாரேஷ் (26) என்பவருக்கும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்புதான் இருவீட்டாரின் சம்மதத்துடன் மிக விமர்சையாகத் திருமணம் நடைபெற்றுள்ளது.

5வது திருமணம்

திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே தம்பதியினருக்கு இடையே சிறிய அளவிலான கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாகக் கணவருடன் கோபித்துக் கொண்ட ரஞ்சிதா, வேளச்சேரியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்து கடந்த சில நாட்களாகத் தங்கி வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை அன்று ரஞ்சிதா தனது கணவர் குமாரேஷுடன் சமாதானமாகப் பேசுவதற்காக அவரது செல்போன் எண்ணிற்குப் பலமுறை தொடர்பு கொள்ள முயற்சி செய்துள்ளார். ஆனால், குமாரேஷ் அவரது அழைப்புகளை ஏற்காமல் பேச மறுத்து வந்ததாகத் தெரிகிறது.

தொடர்ந்து ரஞ்சிதாவிடம் இருந்து அழைப்புகள் வந்ததால் ஆத்திரமடைந்த குமாரேஷ், ரஞ்சிதாவின் செல்போன் எண்ணை முழுமையாக முடக்கியுள்ளார். தான் எவ்வளவு முயன்றும் கணவர் தன்னுடன் பேச மறுப்பதோடு, தனது எண்ணையும் பிளாக் செய்துவிட்டாரே என்ற வேதனை ரஞ்சிதாவிற்குள் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த ரஞ்சிதா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

திருமணம் கல்யாணம்

வீட்டிற்கு வந்த ரஞ்சிதாவின் குடும்பத்தினர் அவர் விபரீத முடிவு எடுத்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து அலறியுள்ளனர். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து வந்த வேளச்சேரி காவல்துறையினர், ரஞ்சிதாவின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், ரஞ்சிதாவின் தற்கொலைக்குக் கணவர் குமாரேஷின் புறக்கணிப்பு மட்டும்தான் காரணமா அல்லது வேறு ஏதேனும் வரதட்சணை கொடுமைகள் காரணமா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் ஆகி 6 மாதங்களே ஆவதால் இச்சம்பவம் குறித்து ஆர்.டி.ஓ விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.