செல்போன் திருடனைப் பிடிக்க ஓடும் ரயிலிலிருந்து குதித்த பெண் காவலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி!

 
ரயிலில் குதித்த

சென்னையில் ஓடும் மின்சார ரயிலில் தன்னிடம் செல்போன் பறித்த வடமாநில வாலிபரைப் பிடிக்க முயன்று, பெண் காவலர் ஒருவர் ஓடும் ரயிலில் இருந்து குதித்து படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரப்பரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த அடோலின் பிரபா (26) என்பவர், சென்னை மயிலாப்பூரில் உள்ள காவல்துறை தடய அறிவியல் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இவர் லைட் ஹவுஸ் பகுதியில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி இருந்தபடியே வேலைக்குச் சென்று வருகிறார்.

இந்நிலையில் நேற்று தாம்பரத்திலிருந்து சென்னை கடற்கரை நோக்கிச் சென்ற மின்சார ரயிலில் அடோலின் பிரபா பயணம் செய்தார். ரயில் தாம்பரம் சானடோரியம் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டபோது, அவர் செல்போனில் பேசியபடி நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த மர்ம நபர் ஒருவன், எதிர்பாராத விதமாக அடோலின் பிரபாவின் கையில் இருந்த செல்போனைப் பறித்துக் கொண்டு ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்துத் தப்பினான்.

மருத்துவமனை

தன்னுடைய செல்போனைப் பறித்துச் சென்ற திருடனை உடனே பிடிக்க வேண்டும் என்ற வேகத்தில், காவலர் அடோலின் பிரபாவும் தாமதிக்காமல் ஓடும் ரயிலில் இருந்தபடியே கீழே குதித்தார். இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த அவருக்கு முகம், தலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. உடனடியாக அருகில் இருந்த பயணிகள் மற்றும் பொதுமக்கள் அவரை மீட்டு, சிகிச்சைக்காகத் தாம்பரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் இருந்த பொதுமக்கள் உடனே செயல்பட்டு, செல்போனைப் பறித்து ஓடிய நபரைச் சுற்றி வளைத்து மடக்கிப் பிடித்துத் தாம்பரம் ரயில்வே காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், செல்போன் பறிப்பில் ஈடுபட்ட நபர் வடமாநிலத்தைச் சேர்ந்த அஜய் நாயக் (28) என்பது தெரியவந்தது. அதிகளவிலான கஞ்சா போதையில் இருந்த அவன், காவல்துறையினரின் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் காவல் நிலையத்திலேயே ரகளை செய்துள்ளான். விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்த போதே, கையில் குழந்தையுடன் காவல் நிலையத்திற்கு வந்த பெண் ஒருவர், தான் அஜய் நாயக்கின் மனைவி எனக் கூறி ரகளையில் ஈடுபட்டார்:

தண்டவாளம்

தன் கணவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும், இல்லையெனில் குழந்தையுடன் ஓடும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்வேன் என்றும் காவல் நிலையத்தில் மிரட்டல் விடுத்தார். இதனால் தாம்பரம் ரயில் நிலையப் பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு நிலவியது. பின்னர் காவல்துறையினர் அந்தப் பெண்ணைச் சமாதானப்படுத்தி, இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.