எம்.பி. மகனின் சொகுசு கார் மோதி இளம் பெண் உயிரிழப்பு... ரூ.4.5 கோடி மதிப்புள்ள கார் பறிமுதல்!
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ஆஸ்டன் மார்ட்டின் சொகுசு கார் மோதிய விபத்தில், துணிக்கடை ஊழியரான இளம் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத் 'இன்ஆர்பிட் மால்' அருகே ஒடிஷாவைச் சேர்ந்த பாரதி என்ற பெண், தனது தோழியுடன் மதிய உணவு முடித்துவிட்டு மீண்டும் பணிக்குச் செல்லச் சாலையைக் கடந்துள்ளார். அப்போது அவ்வழியாக மிக அதிவேகமாக வந்த 'ஆஸ்டன் மார்ட்டின்' சொகுசு கார், பாரதி மீது பலமாக மோதியது. தலையில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டி வந்தது ஜனசேனா கட்சியின் மாநிலங்களவை எம்.பி. ரமேஷின் மகன் சஞ்சுஷ் (21) என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. கவனக்குறைவாக வாகனம் ஓட்டி உயிரிழப்பை ஏற்படுத்தியதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
விபத்துக்குப் காரணமான ரூ.4.5 கோடி மதிப்பிலான சொகுசு காரைக் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். சஞ்சுஷ் மதுபோதையில் காரை ஓட்டினாரா என்பதைக் கண்டறிய அவரது ரத்த மாதிரிகள் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன. ஆய்வு முடிவுகள் வந்தவுடன் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
