வீட்டில் ஃப்ரிட்ஜ் வெடித்து பெண் உயிரிழப்பு; கணவர், மகன் படுகாயம்!

 
ஃப்ரிட்ஜ்

 

சென்னை கொரட்டூரில் குளிர்சாதனப் பெட்டியில் ஏற்பட்டதாகக் கூறப்படும் மின்கசிவைத் தொடர்ந்து வீட்டில் தீ விபத்து ஏற்பட்டு, 48 வயது பெண் உயிரிழந்தார். அவரது கணவர் மற்றும் மகன் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரட்டூர் பெரியார் நகர், விவேகானந்தா பள்ளி அருகே உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பின் கீழ்தளத்தில் ரமணி (55), அவரது மனைவி அகிலா (48), மகன் கார்த்திக் (23) ஆகியோர் வசித்து வந்தனர்.

Korattur

நவம்பர் 1-ம் தேதி அதிகாலை சுமார் 3 மணியளவில் வீட்டில் திடீரென தீப்பிடித்தது. இதையடுத்து ரமணியும் கார்த்திக்கும் வெளியேறிய நிலையில், படுக்கையறையில் இருந்த அகிலாவால் உடனடியாக வெளியே வர முடியவில்லை. தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனால் அகிலா உயிரிழந்தது தெரியவந்தது.

அகிலாவின் உடல் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பப்பட்டது. ரமணியும் கார்த்திக்கும் அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.வீட்டில் பழுதடைந்திருந்த குளிர்சாதனப் பெட்டியில் ஏற்பட்ட மின்கசிவால் தீ விபத்து நேர்ந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். விபத்துக்கான வேறு காரணங்கள் குறித்தும் கொரட்டூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.