வேலூரில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் பெண் பலி; ஆலையின் உரிமம் ரத்து!
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே நடைபெற்ற பட்டாசு ஆலை வெடி விபத்தில் பெண் தொழிலாளி உயிரிழந்ததைத் தொடர்ந்து, அந்தப் பட்டாசு ஆலையின் உரிமத்தை ரத்து செய்து மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே ஹரி பிரசாத் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு தயாரிப்பு ஆலை இயங்கி வந்தது. இந்நிலையில், நேற்று காலை அங்கு எதிர்பாராதவிதமாக வெடி விபத்து ஏற்பட்டு, பெண் உயிரிழந்தார்.

முதற்கட்ட விசாரணையின்படி, பெய்துவரும் மழை காரணமாக வெடிமருந்துகளில் ஈரப்பதம் இருந்ததால், அவற்றைக் காயவைப்பதற்காகத் தரையில் கொட்டித் தயாரித்துள்ளனர். அப்போது தரையின் வெப்பம் அதிகரித்து திடீரெனத் தீப்பற்றியதன் காரணமாக இந்த விபத்து நேரிட்டது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, பாதுகாப்பு விதிகளுக்கு முரணாகச் செயல்பட்டதன் அடிப்படையில் அந்தப் பட்டாசு ஆலையின் உரிமத்தை வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் சுரேஷ் உடனடியாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
