குடிசை வீடு தீப்பற்றி எரிந்ததில் பெண் உயிரிழப்பு!
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே நள்ளிரவில் குடிசை வீடு தீப்பற்றி எரிந்த விபத்தில், உள்ளே தனியாக வசித்து வந்த 60 வயது மூதாட்டி உடல் கருகி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீர்காழி அடுத்த கீராநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நூர்ஜகான் (60). இவர் தனது குடிசை வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இன்று நள்ளிரவு சுமார் 3 மணியளவில் இவரது வீட்டில் எதிர்பாராத விதமாகத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ மளமளவெனக் குடிசை முழுவதும் பரவியதில், உள்ளே இருந்த நூர்ஜகான் வெளியே வர முடியாமல் சிக்கிக்கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாகத் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைப்பதற்குள் குடிசை வீடு முழுவதும் எரிந்து சாம்பலானது. இதில் தீயில் சிக்கிய நூர்ஜகான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த சீர்காழி காவல்துறையினர், உயிரிழந்த நூர்ஜகானின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மின் கசிவு காரணமாக இந்தத் தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்துக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
