சாலை விபத்தில் பலியான பெண் மருத்துவர்... குடும்பத்திற்கு ரூ.1.4 கோடி இழப்பீடு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

 
விபத்து மரணம் கொலை  தற்கொலை

கடந்த 2022-ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே நடந்த கொடூரச் சாலை விபத்தில் உயிரிழந்த பெண் பல் மருத்துவர் இமயவல்லியின் குடும்பத்திற்கு ரூ.1.4 கோடி இழப்பீடு வழங்க தனியார் காப்பீட்டு நிறுவனத்திற்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குடும்பத்தினர் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்த முக்கியத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

கடந்த 2022-ஆம் ஆண்டு கும்பகோணம் அருகே மருத்துவர் இமயவல்லி பயணித்த வாகனம் மீது, எதிரே வந்த சரக்கு வாகனம் (Cargo Vehicle) மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயமடைந்த பல் மருத்துவர் இமயவல்லி பரிதாபமாக உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, இழப்பீடு கோரி அவரது குடும்பத்தினர் நீதிமன்றத்தை அணுகினர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஓட்டுநரின் அதிவேகமும், கவனக்குறைவாகச் சரக்கு வாகனத்தை இயக்கியதுமே இந்த விபத்திற்குக் காரணம் என்பதை ஆதாரப்பூர்வமாக உறுதி செய்தது.

மருத்துவர் இமயவல்லியின் எதிர்கால வருமானம், அவரது வயது, குடும்பச் சூழல் மற்றும் சரக்கு வாகன ஓட்டுநரின் அலட்சியம் ஆகியவற்றை முழுமையாகக் கருத்தில் கொண்ட சென்னை உயர்நீதிமன்றம், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய நீதி கிடைக்கும் வகையில் இழப்பீட்டுத் தொகையை நிர்ணயித்தது.

அதன்படி, சம்பந்தப்பட்ட தனியார் காப்பீட்டு நிறுவனம், உயிரிழந்த மருத்துவரின் குடும்பத்திற்கு ரூ.1.4 கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகையை வட்டியுடன் வழங்க வேண்டும் என அதிரடி உத்தர பிறப்பித்துள்ளது. இந்தத் தீர்ப்பு விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குப் பெரு ஆறுதலாக அமைந்துள்ளது.