விமானப்படையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பெண்ணிடம் ரூ.1.95 லட்சம் மோசடி!
குஜராத் மாநிலத்தில் சமூக வலைதளம் மூலம் பெண்ணிடம் நூதன முறையில் லட்சக்கணக்கில் பணம் பறித்த வாலிபரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
காந்திநகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பொறியாளராகப் பணியாற்றும் பெண்ணுக்கு, கடந்த மே மாதம் இன்ஸ்டாகிராம் மூலமாகப் பரத்வாஜ் என்பவன் அறிமுகமாகியுள்ளான். தான் இந்திய விமானப்படையில் 'விங் கமாண்டர்' என்றும், தற்போது கர்நாடகாவில் பணியாற்றி வருவதாகவும் அவன் நம்பவைத்துள்ளான்.
இந்திய விமானப்படையில் வேலை வாங்கித் தருவதாகக் ஆசை வார்த்தைகளைக் கூறி, பல்வேறு தவணைகளாக அந்தப் பெண்ணிடமிருந்து மொத்தம் ரூ.1.95 லட்சத்தை அவன் பெற்றுள்ளான். ஆனால், உறுதியளித்தபடி எந்த வேலையும் வாங்கித் தராமல் மேலும் பணம் கேட்டுத் தொல்லை கொடுத்துள்ளான்.
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்தப் பெண் உடனடியாகக் காவல்துறையில் புகார் அளித்தார். புகாரின் பேரில் தீவிர விசாரணை நடத்திய போலீசார், ராஜ்கோட் பகுதியில் வாடகை வீட்டில் பதுங்கியிருந்த பரத்வாஜைக் கைது செய்தனர்.
அவனிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், ஏற்கெனவே மதுவிலக்கு தொடர்பான இரண்டு வழக்குகள் அவன் மீது இருப்பது தெரியவந்துள்ளது. இவன் இதேபோன்று வேறு யாரையாவது ஏமாற்றியுள்ளானா என்பது குறித்தும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
