டேட்டிங் செயலி மூலம் ரூ.6 கோடி மோசடி - ஆண்களை மிரட்டிப் பணம் பறித்த இளம்பெண் தலைமறைவு!
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் டேட்டிங் செயலிகள் மூலம் ஆண்களிடம் பழகி, அவர்களின் அந்தரங்கப் படங்களை வைத்து மிரட்டி பல கோடி ரூபாய் பணம் பறித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பல்லவி சிங் ராஜ்புத் என்ற பெண், பிரபல டேட்டிங் செயலிகள் வாயிலாக ஆண்களுடன் பழகியுள்ளார். பின்னர் அவர்களின் அந்தரங்கப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பயன்படுத்தி மிரட்டி, இதுவரை ரூ.6 கோடி வரை பணம் பறித்துள்ளது தெரியவந்துள்ளது. இவர் மிரட்டியும் பணம் தர மறுத்த ஆண்கள் மீது காவல் நிலையத்தில் பொய் புகார்களை அளித்து, 5 பேரைச் சிறையிலும் அடைக்க வைத்துள்ளார்.

பாதிக்கப்பட்ட நபர்கள் தொடர்ந்த வழக்கினை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், இச்சம்பவம் குறித்து உடனடியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தக் காவல்துறையினருக்கு உத்தரவிட்டது.

நீதிமன்ற உத்தரவின்பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, தற்போது தலைமறைவாக உள்ள பல்லவி சிங் ராஜ்புத் மற்றும் அவருக்குத் துணையாகச் செயல்பட்ட நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
