6-வது மாடியில் இருந்து குதித்து பெண் என்ஜினீயர் தற்கொலை... 6 மாதக் குழந்தையைத் தவிக்கவிட்டுச் சென்ற சோகம்!
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் மாநகரில் உள்ள ஒரு பிரம்மாண்ட அடுக்குமாடி குடியிருப்பில், அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறியுள்ளது. மராட்டிய (மகாராஷ்டிரா) மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ஈஷா (37) என்ற பெண்மணி, ஐதராபாத்தில் தங்கி அங்குள்ள ஒரு முன்னணி ஐடி நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணிபுரிந்து வந்தார்.

ஈஷாவிற்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். மூத்த மகளுக்கு 8 வயது ஆகும் நிலையில், இரண்டாவது குழந்தையைப் பெற்றெடுத்து தற்போது 6 மாதங்களே ஆகிறது. இந்நிலையில், நேற்று காலை தனது அடுக்குமாடி குடியிருப்பின் 6-வது மாடியில் உள்ள பால்கனி பகுதிக்கு வந்த ஈஷா, யாரும் எதிர்பாராத விதமாக அங்கிருந்து திடீரென கீழே குதித்துள்ளார்.
6-வது மாடியில் இருந்து கீழே குதித்ததில், தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஐதராபாத் போலீசார், ஈஷாவின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

6 மாதக் கைக்குழந்தையையும், மூத்த மகளையும் தவிக்கவிட்டு பெண் பொறியாளர் தற்கொலை செய்து கொண்டதற்கான உண்மைப் பின்னணி என்ன, குடும்பத் தகராறா அல்லது மன உளைச்சலா என்ற கோணத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
