தவெக வேட்பாளர் மீது பாலியல் புகாரளித்த இளம்பெண், நீதிமன்றத்தில் மனு!
பூந்தமல்லி சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பிரகாசம் மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக, அவருக்கு வழங்கப்பட்ட முன்ஜாமீனை ரத்து செய்யக் கோரி பாதிக்கப்பட்ட பெண் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், தமிழக வெற்றிக் கழகத்தின் மகளிர் அணி நிர்வாகி ஒருவர் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியின் போது வேட்பாளர் பிரகாசம், தன்னிடம் தவறான முறையில் நடந்து கொண்டதாகவும், பாலியல் ரீதியான சீண்டல்களில் ஈடுபட்டதாகவும் அந்தப் பெண் நிர்வாகி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்தப் புகாரைத் தொடர்ந்து கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க, பிரகாசம் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார். அவருக்கு நீதிமன்றம் நிபந்தனையுடன் கூடிய முன்ஜாமீன் வழங்கியிருந்தது. தற்போது இந்த வழக்கில் புதிய திருப்பமாக, பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
"முன்ஜாமீனில் இருக்கும் பிரகாசம், சாட்சிகளைக் கலைக்க முயற்சி செய்யலாம் மற்றும் தனக்குத் தொடர்ந்து அச்சுறுத்தல் விடுக்க வாய்ப்புள்ளது. எனவே, அவருக்கு வழங்கப்பட்ட முன்ஜாமீனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்," என அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

தேர்தல் பிரசாரம் உச்சகட்டத்தில் இருக்கும் வேளையில், தவெக வேட்பாளர் மீதான இந்த நீதிமன்ற நடவடிக்கை அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பூந்தமல்லி தொகுதியில் மற்ற கட்சிகள் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்து விமர்சிக்கத் தொடங்கியுள்ளன. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
