குடும்பக் கட்டுப்பாடு செய்த பெண் மீண்டும் கர்ப்பம் - ஈரோடு அரசு மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்!

 
ஈரோடு பெரியார் அரசு மருத்துவமனை

ஈரோடு அரசு மருத்துவமனையில் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துகொண்டதாகக் கூறப்பட்ட பெண் மீண்டும் கர்ப்பமானதால், அவரது உறவினர்கள் மருத்துவர்களுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சுரேஷ் - சத்தியபிரியா தம்பதியினருக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த 2021-ஆம் ஆண்டு 2-வது குழந்தை பிறந்தபோது, தம்பதியினரின் ஒப்புதலுடன் ஈரோடு அரசு மருத்துவமனையில் குடும்பக் கட்டுப்பாடு செய்ய முடிவெடுக்கப்பட்டது.

கர்ப்பிணி

பிரசவத்திற்குப் பின் வழங்கப்பட்ட டிஸ்சார்ஜ் ஆவணத்தில் சத்தியபிரியாவுக்குக் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை வெற்றிகரமாகச் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில் சத்தியபிரியா மீண்டும் கர்ப்பமடைந்ததால் அதிர்ச்சியடைந்த தம்பதியினர் ஈரோடு அரசு மருத்துவமனைக்குச் சென்று புகார் அளித்தனர். பரிசோதனையில் அவர் கர்ப்பமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது.

மருத்துவமனை ஆவணங்களை ஆய்வு செய்த மருத்துவர்கள், 2-வது பிரசவத்தின் போது சத்தியபிரியாவின் உடல்நிலை மோசமாக இருந்ததால் அவருக்குக் குடும்பக் கட்டுப்பாடு செய்யப்படவில்லை என்றும், ஆனால் டிஸ்சார்ஜ் குறிப்பில் தவறுதலாகக் 'குடும்பக் கட்டுப்பாடு செய்யப்பட்டது' என எழுதப்பட்டுவிட்டதாகவும் விசித்திரமான விளக்கம் அளித்தனர்.

கர்ப்பிணி

மருத்துவமனையின் அலட்சியப் போக்காலும் தவறான சான்றிதழாலும் ஆத்திரமடைந்த குடும்பத்தினர் அங்கிருந்த மருத்துவர்களுடன் நீண்ட நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு நிலவியது.