பைக்கில் சென்று கொண்டிருந்த போதே குழந்தை பெற்றெடுத்த இளம்பெண் - வியட்நாமில் நெகிழ்ச்சி சம்பவம்!
மருத்துவமனை வாசலில் கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோதே நிறைமாதக் கர்ப்பிணிப் பெண் ஒருவர் குழந்தை பெற்றெடுத்த அரிதான சம்பவம் வியட்நாமில் நிகழ்ந்துள்ளது.
வியட்நாமின் தாய் குவாங் மாகாணம் புலுவாங் பகுதியைச் சேர்ந்த 25 வயது பெண்ணிற்கு திடீரெனக் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. நிலைமையை உணர்ந்த அவரது கணவர், மனைவியை அவசரமாகத் தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு விரைந்துள்ளார். மருத்துவமனையின் வாசலை அடைவதற்கு முன்பாகவே பெண்ணிற்குப் பிரசவ வலி தீவிரமடைந்து, பைக்கின் பின் இருக்கையிலேயே பெண் குழந்தை பிறந்துள்ளது.

இக்காட்சியைக் கண்ட மருத்துவமனையின் மருத்துவர்களும் செவிலியர்களும் உடனடியாக ஓடிவந்து, தாயையும் புதிதாகப் பிறந்த குழந்தையையும் மீட்டு அவசர சிகிச்சைப் பிரிவிற்கு அழைத்துச் சென்றனர். முதலுதவி சிகிச்சைக்குப் பிறகுத் தாயும் சேயும் ஆரோக்கியமாகவும் நலமுடனும் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மருத்துவமனை வாசலில் பைக் இருக்கையிலேயே பிரசவம் நடந்த இந்த அரிதான மற்றும் நெகிழ்ச்சியான தருணம் வீடியோவாகப் பதிவாகி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. தாயின் தைரியத்தையும், சரியான நேரத்தில் விரைந்து செயல்பட்டு உதவி செய்த மருத்துவக் குழுவினரின் சேவையையும் இணையவாசிகள் பாராட்டி வருகின்றனர்.
