வீடு புகுந்து 6 பவுன் நகை, பணம் திருடிய பெண் தலைமை காவலர் சஸ்பெண்ட் - ராஜபாளையத்தில் பரபரப்பு!
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் பூ வியாபாரி ஒருவரின் வீட்டில் புகுந்து நகை மற்றும் பணத்தைத் திருடிய பெண் தலைமை காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சங்கரபாண்டியபுரம் தெருவைச் சேர்ந்த சங்கரலிங்கம் என்பவர் பூ வியாபாரம் செய்து வருகிறார். இவர் கடந்த மாதம் குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்த போது இச்சம்பவம் நடந்துள்ளது.
வியாபாரி சங்கரலிங்கம் ஊரில் இல்லாத சமயத்தில், அவரது வீட்டின் பீரோவில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 6 பவுன் நகை மற்றும் ரூ.50,000 ரொக்கம் ஆகியவைகளைக் மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் ராஜபாளையம் நகர் தெற்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராப் பதிவுகளைக் கொண்டு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஒரு பெண் சங்கரலிங்கம் வீட்டில் இருந்து நகை மற்றும் பணத்தை எடுத்துச் செல்வது தெளிவாகப் பதிவாகியிருந்தது.
போலீசாரின் விசாரணையில், சங்கரலிங்கத்தின் வீட்டின் அருகே வசிப்பவரும், அவருக்குச் சகோதரி முறை உடையவருமான பாக்கியலட்சுமி என்பவருக்குத் திருட்டுச் சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இவர் ராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்தில் தலைமை காவலராகப் பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

திருட்டுச் சம்பவத்தில் பெண் தலைமை காவலர் பாக்கியலட்சுமிக்குத் தொடர்பு இருப்பதற்கான முகாந்திரம் உள்ளதால், விசாரணைக்கு ஏதுவாக அவரைப் பணியிடை நீக்கம் செய்து விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கவுதம் கோயல் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பான தீவிர விசாரணைக்குப் பிறகே முழு உண்மையும் வெளிவரும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
