ரேபிடோ பைக் மீது கார் மோதி விபத்து - பெண் ஐடி ஊழியர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!

 
பைக் விபத்து பைக் விபத்து

சென்னையில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்த்து, அலுவலகங்களுக்கு விரைவாகச் செல்ல பலராலும் பயன்படுத்தப்படும் ரேபிடோ பைக் டாக்ஸி மீது அடையாளம் தெரியாத கார் ஒன்று மோதிய விபத்தில், அதில் பயணித்த இளம் பெண் ஐடி ஊழியர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சென்னை கொளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கோமதி (31). இவர் சென்னை ராமாபுரத்தில் உள்ள ஒரு முன்னணி தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஊழியராகப் பணியாற்றி வந்தார்.  கோமதி தினமும் அலுவலகம் செல்வதற்கும், வீடு திரும்புவதற்கும் குறைந்த கட்டணத்தில் விரைவாகச் செல்லக்கூடிய மொபைல் செயலி வழிச் சேவையான 'ரேபிடோ' பைக் டாக்ஸியைப் பயன்படுத்தி வந்துள்ளார்.

கொலை தற்கொலை வெட்டி மரணம் விபத்து

எப்போதும் போல இன்று காலை கோமதி ரேபிடோ பைக்கில் அமர்ந்து ராமாபுரத்தில் உள்ள தனது அலுவலகத்திற்குச் சென்று கொண்டிருந்தார். பைக் சென்னை வானகரம் பகுதி அருகே வந்து கொண்டிருந்தபோது, பின்னால் மிக அதிவேகமாகவும் அநாகரீகமாகவும் வந்த அடையாளம் தெரியாத கார் ஒன்று, எதிர்பாராதவிதமாக ரேபிடோ பைக் மீது பயங்கரமாக மோதிவிட்டு நிற்காமல் தப்பியோடியது.

இந்த விபத்தின் தாக்கத்தால் பைக்கின் பின்னால் அமர்ந்திருந்த ஐடி ஊழியர் கோமதி தூக்கி வீசப்பட்டு, தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

மாணவி இளம்பெண் சடலமாக சடலம் தற்கொலை கொலை

இந்த விபத்தில் ரேபிடோ பைக் ஓட்டுநரும்  படுகாயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். விபத்தைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் உடனடியாக போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வானகரம் போலீசார், கோமதியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், படுகாயமடைந்த ரேபிடோ ஓட்டுநரை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளனர். இச்சம்பவம் குறித்துப் போலீசார்  வழக்குப் பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பியோடிய அந்தக் காரின் ஓட்டுநரைச் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.