வியாபாரியை காரில் கடத்தி 3 சவரன் நகை பறித்த இளம்பெண் - தென்காசியில் அதிர்ச்சி!
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் முதிய வியாபாரியை நைசாகக் காரில் கடத்திச் சென்று அவரிடமிருந்த நகைகளைக் பறித்துச் சென்ற இளம்பெண் உட்பட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கடையநல்லூர் பிரதான கடை வீதியில் உள்ள பஞ்சு மெத்தை கடையில் வேலை பார்த்துவரும் 76 வயதான சந்தானகிருஷ்ணன் என்பவரிடம், தலையணை வாங்குவது போல் வந்த கும்பல் அவரை வலுக்கட்டாயமாக ஒரு காரில் ஏற்றிச் கடத்திச் சென்றது. பின்னர் அவரிடமிருந்த 3 சவரன் தங்க நகையைப் பறித்துக்கொண்டு அவரை வழியிலேயே இறக்கிவிட்டுத் தப்பியோடியது.
கடையநல்லூரைச் சேர்ந்த சுபா (19) என்ற இளம்பெண், சந்தானகிருஷ்ணன் மேற்பார்வையிட்டு வந்த அடகு கடையில் நகை ஒன்றை அடகு வைத்திருந்தார். அந்த நகைக்கு அதிக வட்டி கேட்கப்பட்டதால் இருவருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.
இந்த ஆத்திரத்தில் சுபா, தனது இன்ஸ்டாகிராம் மூலமாகப் பழக்கமான நண்பர்களின் உதவியுடன் சந்தானகிருஷ்ணனைக் காரில் கடத்தி இந்தத் துணிகரச் செயலில் ஈடுபட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த கடையநல்லூர் காவல்துறையினர், இளம்பெண் சுபா மற்றும் அவரது நண்பர்களான லட்சுமணன் (25), சந்துரு (24), மனோ (23) ஆகிய நான்கு பேரையும் அதிரடியாகக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
