கொடுத்த கடனைத் திரும்பக் கேட்ட பெண் பேராசிரியர் கழுத்தை நெரித்துக் கொலை - தம்பதி கைது!
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே, கொடுத்த கடனைத் திரும்பக் கேட்ட தனியார் பாலிடெக்னிக் கல்லூரிப் பெண் பேராசிரியர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துறையூர் அடுத்த கீரம்பூரைச் சேர்ந்த சுகன்யா (36), துறையூர் அருகே உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்து வந்தார். கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த இவர், பகுதி நேரமாக வட்டிக்குப் பணம் கொடுத்துத் தொழில் செய்வதுடன் சீட்டும் நடத்தி வந்துள்ளார்.
துறையூர் கண்ணனூர் சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்த சுமதி - துரைராஜ் தம்பதியினருக்கு சுகன்யா பணம் கடன் கொடுத்திருந்தார். கடந்த 20-ஆம் தேதி கொடுத்த கடனையும் சீட்டுப் பணத்தையும் வசூலிக்கச் சென்றபோது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த தம்பதியினர் சுகன்யாவை இரும்பு கம்பியால் தாக்கி, கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்தனர்.
கொலையை மறைப்பதற்காக சுகன்யாவின் சடலத்தைக் கரட்டாம்பட்டி பாலத்தின் அடியில் வீசிவிட்டுத் தப்பியோடியுள்ளனர். காணாமல் போன மகள் குறித்து தந்தை மனோகரன் அளித்த புகாரின் பேரில், பாலத்தின் அடியில் அழுகிய நிலையில் கிடந்த சடலத்தைக் காவல்துறையினர் மீட்டனர். தீவிர விசாரணைக்குப் பிறகு சுமதி மற்றும் துரைராஜ் ஆகிய இருவரையும் புலிவலம் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சுகன்யா காணாமல் போன அன்றே புகார் அளிக்கச் சென்ற தந்தையை "எல்லைப் பிரச்சனை" எனக் கூறி அலைக்கழித்த துறையூர் காவல் உதவி ஆய்வாளர் தினேஷ், ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். காவல்துறையின் இந்தத் தாமதமான நடவடிக்கைக்குப் பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
