பயங்கரம்: பெண் மீது மிளகாய்பொடி தூவி 5 பவுன் தங்க செயின் பறிப்பு!
நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் அருகே உள்ள பாலக்காடு கிராமத்தில் நள்ளிரவில் மாபெரும் கொள்ளைச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. பாலக்காடு கிராமத்தைச் சேர்ந்த குபேந்திரன் என்பவரது மனைவி குணசுந்தரி (42), தனது கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதால் தற்பொழுது தனது தந்தை தியாகராஜன் வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று (21 ஆம் தேதி) இரவு தந்தை தியாகராஜன் வீட்டின் வாசலிலும், குணசுந்தரி வீட்டின் உள்ளேயும் தூங்கிய பொழுது அதிகாலை 4 மணியளவில் இந்த விபரீத துணிகரக் கொள்ளைச் சம்பவம் அரங்கேறியுள்ளது.

அதிகாலை வேளையில் வீட்டின் பின்வாசல் வழியாகக் குணசுந்தரி இயற்கை உபாதை கழிக்கச் சென்றபோது, அங்கு ஏற்கனவே பதுங்கியிருந்த முகமூடி அணிந்த இரண்டு மர்ம நபர்கள் குணசுந்தரி மீது மிளகாய்பொடியைத் தூவித் தாக்குதல் நடத்தினர். கண் இமைக்கும் நேரத்தில் அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் மதிப்புள்ள தங்க செயினைப் பறித்துக்கொண்டு அந்த மர்மக் கும்பல் அசுர வேகத்தில் தப்பியோடியது. இதனால் அதிர்ச்சியடைந்த குணசுந்தரி அலறிச் சத்தம் போடவே, வாசலில் தூங்கிக் கொண்டிருந்த தந்தை தியாகராஜன் ஓடிவந்து பார்த்துத் தனது மகளை மீட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் அவசரச் சிகிச்சைக்கு அனுமதித்தார்.
இந்தக் கொடூரச் சம்பவம் குறித்து நாகூர் காவல் துறையினர் தற்பொழுது தீவிர வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய மர்ம நபர்களைப் போர்க்கால அடிப்படையில் தேடி வருகின்றனர். மேலும், சம்பவ இடத்திற்கு டிஎஸ்பி ராமசந்திர மூர்த்தி தலைமையிலான போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் நேரில் விரைந்து சென்று தீவிர விசாரணை மற்றும் சோதனைகளை நடத்தி வருகின்றனர்
