அமைச்சர் பெயரைச் சொல்லி போலீசாருக்கு மிரட்டல் விடுத்த இளம்பெண்!

 
போலீசாருக்கு மிரட்டல்

சென்னையில் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் தகராாரில் ஈடுபட்டு, அமைச்சர் தனது உறவினர் எனக் கூறி காவல்துறையினரையும் மிரட்டிய இளம்பெண்ணைத் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

சென்னை அம்பத்தூர் மங்களபுரம் பகுதியில் கடந்த அக்டோபர் 15ஆம் தேதி அரசுப் பேருந்து சென்றுகொண்டிருந்தது. அப்போது சாலையில் தேங்கியிருந்த மழைநீர் அவர்கள் மீது தெறித்ததாகக் கூறி, தரணி (24) மற்றும் முகமது ஜவாஹீர் (30) ஆகிய இருவரும் பேருந்தின் ஓட்டுநர் முருகதாஸ் மற்றும் நடத்துநர் ரகுவிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். 

அம்பத்தூர்

இந்த தகராறைக் கட்டுப்படுத்த அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் வந்தபோது, அந்த இளம்பெண் தரணி, "அமைச்சர் பர்வேஸ் எனது மச்சான்" என்று கூறி காவல்துறையினரை ஒருமையில் மிரட்டியுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து பேருந்து ஓட்டுநர் அளித்த அதிகாரப்பூர்வ புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் உடனடியாக வழக்குப்பதிவு செய்தனர். முதற்கட்ட நடவடிக்கையாக இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய முகமது ஜவாஹீரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவாகியுள்ள இளம்பெண் தரணியைத் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.