தலைமைச் செயலகத்தில் அரசு பணி கேட்டு பெண் தீக்குளிக்க முயற்சி!!

 
தீக்குளிக்க

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சர் தனிப்பிரிவு அலுவலகம் முன்பாகப் பெண் ஒருவர் திடீரெனத் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் அஞ்சலை. இவருடைய மகள் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாகத் தேள் கடித்ததில் உரியச் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. மகளின் இழப்பிற்குப் பிறகு வாழ்வாதாரமின்றித் தவித்து வந்த அஞ்சலை, தனக்கு அரசுப் பணி வழங்கி உதவ வேண்டும் என்று கோரித் தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவில் மனு அளிப்பதற்காக இன்று தலைமைச் செயலகத்திற்கு வந்துள்ளார்.

தமிழக அரசு தலைமை செயலகம்

தலைமைச் செயலகத்தின் நுழைவாயிலில் காவல்துறையினரின் பலத்த பாதுகாப்புச் சோதனைகள் நடத்தப்படும் நிலையிலும், அதனைத் தாண்டி அஞ்சலை தனது உடமைகளுக்குள் மண்ணெண்ணெய் பாட்டிலை ரகசியமாக மறைத்துக் கொண்டு வந்துள்ளார். முதலமைச்சர் தனிப்பிரிவு அலுவலகத்தின் அருகே வந்ததும், திடீரெனத் தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றார்.

அவர் தீக்குளிக்க முயன்றதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், உடனடியாகப் பாய்ந்து சென்று அவரிடமிருந்த மண்ணெண்ணெய் பாட்டிலைப் பறிமுதல் செய்து தடுத்து நிறுத்தினர்.

அவர் மீது தண்ணீரை ஊற்றிப் பாதுகாத்த காவலர்கள், அவரை உடனடியாக மீட்டு விசாரணைக்காகக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். மிகுந்த பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்கும் தலைமைச் செயலக வளாகத்திலேயே பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்ற இச்சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.