கல்குவாரியில் பெண் சடலமாக மீட்பு: சொத்து பிரச்சினையில் கணவர், மருமகன் கைது!
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியைச் சேர்ந்த பெண் காணாமல் போன வழக்கில், அவர் சொத்து பிரச்சின காரணமாகக் கணவர் மற்றும் மருமகனால் கொலை செய்யப்பட்டு கல்குவாரி குட்டையில் வீசப்பட்டது தெரியவந்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நேதாஜி நகர் தெற்கு, பாரதிநகர் பகுதியில் உள்ள செயல்படாத கல்குவாரியில் துர்நாற்றம் வீசியுள்ளது. அப்பகுதி மக்கள் சென்று பார்த்தபோது குட்டையில் பெண் சடலம் கிடப்பது தெரியவந்தது. தகவலறிந்து வந்த வாணியம்பாடி கிராமிய காவல் துறையினர் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்து கிடந்தவர் அரூர் அடுத்த பாப்பிரெட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்த சசிகலா (52) என்பது தெரியவந்தது. இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு 24 பவுன் நகைகள் மற்றும் ₹25,000 பணத்துடன் காணாமல் போனதாக இவரது கணவர் அசோகன் பாப்பிரெட்டிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
பாப்பிரெட்டிப்பட்டி காவல்துறையினர் நடத்திய விசாரணையில், சொத்து பிரச்சினை காரணமாகக் கணவர் அசோகன் மற்றும் மருமகன் அஸ்லாம் ஆகியோர் சேர்ந்து சசிகலாவைக் கொலை செய்தது அம்பலமானது.
கொலையை மறைக்க உடலை வாணியம்பாடிக்குக் கொண்டு வந்து செயல்படாத கல்குவாரியில் வீசிவிட்டுச் சென்றுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், கணவர் அசோகன் மற்றும் மருமகன் அஸ்லாம் ஆகிய இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
