“பெண்கள் ஒன்றும் பகடைக்காய் அல்ல..” - நயினார் நாகேந்திரனுக்கு குஷ்பு பகிரங்க கண்டனம்!
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் பேச்சுக்கு, அதே கட்சியின் மாநில துணைத் தலைவரும் நடிகையுமான குஷ்பு சுந்தர் பகிரங்கமாகக் கண்டனம் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது பாஜக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக முதலமைச்சரின் தாயார் குறித்து நயினார் நாகேந்திரன் தெரிவித்த தரக்குறைவான கருத்து அருவருப்பானது என்றும், எந்தவொரு அரசியல் தளத்திலும் இத்தகைய தனிப்பட்ட விமர்சனங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும் குஷ்பு காட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.

"அரசியல் விளையாட்டுகளில் பெண்களை ஒரு பகடைக்காயாகப் பயன்படுத்தக் கூடாது" என்றும், எந்தவொரு பெண்ணைப் பற்றி அவதூறாகப் பேசுவதற்கு முன்பும் ஒவ்வொரு ஆணும் சிந்திக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பெண்களுக்கு முன்னுரிமையும் மரியாதையும் அளித்து வரும் சூழலில், சொந்தக் கட்சித் தலைவரின் இத்தகைய பேச்சு பெரும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் அளிப்பதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே நயினார் நாகேந்திரனின் இந்த எல்லை மீறிய பேச்சுக்கு அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் தவெக நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், சொந்தக் கட்சியின் மூத்த நிர்வாகியான குஷ்புவின் இந்த பகிரங்கக் கண்டனம் பாஜகவை மேலும் தர்மசங்கடத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
