“பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை” - தவெக புஸ்ஸி ஆனந்த் மீது பெண் நிர்வாகிகள் குற்றச்சாட்டு!

 
ஆனந்த் ஆனந்த்

சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திலிருந்து முக்கியப் பெண் நிர்வாகிகள் விலகி திமுக-வில் இணைந்தது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தவெக-வின் மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் கல்பனா, பகுதி மகளிர் அணி அமைப்பாளர் இளவரசி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட பெண் தொண்டர்கள் இன்று அக்கட்சியிலிருந்து விலகி, திமுக-வில் தங்களை இணைத்துக் கொண்டனர். விலகிய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கல்பனா, தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீது அடுக்கடுக்கான புகார்களைத் தெரிவித்துள்ளார்.

"கட்சியில் பெண்களுக்கு உரிய மரியாதையும் பாதுகாப்பும் வழங்கப்படுவதில்லை. உழைப்பவர்களுக்கு அங்கீகாரம் கிடைப்பதில்லை. கட்சியில் நடக்கும் தவறுகளைத் தட்டிக் கேட்டால், பொதுச்செயலாளர் ஆனந்த் மிரட்டுகிறார். ஒரு ஜனநாயகக் கட்சியில் நிர்வாகிகளை மிரட்டுவது ஏற்கத்தக்கதல்ல." தவெக-வில் நிலவும் இந்தச் சூழலால், பெண்களுக்குப் பாதுகாப்பு தரும் மற்றும் அங்கீகாரம் அளிக்கும் திமுக-வில் இணைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மகளிர் அணியினர் ஒட்டுமொத்தமாக விலகியது தவெக-வின் களப்பணியைப் பாதிக்கக்கூடும் எனக் கருதப்படுகிறது. குறிப்பாக, கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவராகக் கருதப்படும் புஸ்ஸி ஆனந்த் மீது முன்வைக்கப்படும் இத்தகைய புகார்கள் சமூக வலைதளங்களில் விவாதமாக மாறியுள்ளன.