கொட்டும் மழையில் குழந்தைகளுடன் திரண்ட பெண்கள்... தனுஷின் மகளிர் அணி சந்திப்பில் அரங்கம் நிறைந்தது!
சென்னையில் வடகிழக்கு பருவமழை காரணமாகக் கனமழை கொட்டித் தீர்த்து வரும் சூழலிலும், நடிகர் தனுஷின் நற்பணி மன்ற மகளிர் அணி சிறப்புச் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகப் ஆயிரக்கணக்கான பெண்கள் தங்களது கைக்குழந்தைகளுடன் ஆர்வத்துடன் வருகை தந்துள்ளனர்.
சென்னை சோழிங்கநல்லூர் அடுத்த செம்மஞ்சேரி பகுதியில் அமைந்துள்ள தனியார் பல்கலைக்கழக வளாக அரங்கத்தில், நடிகர் தனுஷ் தனது அகில இந்தியச் சமூக நல நற்பணி மன்றத்தின் மகளிர் அணி நிர்வாகிகளையும் உறுப்பினர்களையும் இன்று நேரில் சந்திக்கிறார்.

இன்று காலை முதலே சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாகக் கனமழை பெய்து வரும் நிலையிலும், அதைப் சிறிதும் பொருட்படுத்தாமல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வருகை தந்த பெண் நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள், தங்களது சிறு குழந்தைகளையும் தூக்கிக் கொண்டு பேரார்வத்துடன் விழாக் கூடத்திற்கு வந்து சேர்ந்தனர். இதனால் அரங்கம் முழுவதும் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது.
சமீபகாலமாக நடிகர் தனுஷ் புதிய அரசியல் கட்சி தொடங்கப்போவதாகவும், அல்லது அதிமுகவில் இணைய உள்ளதாகவும் பல்வேறு செய்திகள் வெளியாகி வருகின்றன. இத்தகைய சூழலில், நற்பணி மன்றத்தின் மகளிர் அணியினரை மட்டும் தனியாக அழைத்துக் கட்டமைப்பு பணிகளை ஆய்வு செய்வதும், அவர்களிடம் நேரில் கலந்துரையாடுவதும் திரையுலகம் மற்றும் அரசியல் வட்டாரங்களில் மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது.

இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவுள்ள இந்த விழாவில் நடிகர் தனுஷ் நேரில் பங்கேற்று உரையாற்ற உள்ள நிலையில், பரவி வரும் அரசியல் தகவல்களுக்கு அவர் முற்றுப்புள்ளி வைப்பாரா அல்லது தனது அடுத்தகட்ட முடிவை அறிவிப்பாரா என்ற பலத்த எதிர்பார்ப்பில் அரங்கத்தில் கூடியுள்ள பெண்களும் ரசிகர்களும் காத்துக் கிடக்கின்றனர்.
