காலையிலேயே இன்ப அதிர்ச்சி... மகளிர் உரிமைத் தொகை வரவு...இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!
தமிழகத்தில் தகுதியுள்ள பெண்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000, மே மாதத்திற்கான தவணையாக இன்று (மே 15) பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வழக்கம்போல் வரவு வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் மறுபரிசீலனை செய்யப்படலாம் என அரசியல் வட்டாரங்களில் செய்திகள் பரவிய நிலையில், தடையின்றிப் பணம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் பயனாளிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
முன்னதாக, இத்திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றத்தில் வலியுறுத்தியிருந்தார். அதற்குப் பதிலளித்த முதலமைச்சர் விஜய், கடந்த அரசின் மக்கள் நலத் திட்டங்கள் அனைத்தும் எவ்விதத் தடையுமின்றித் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று உறுதி அளித்தார். அதன்படியே, இன்று காலை முதலே பெண்களின் வங்கிக் கணக்கிற்கு உரிமைத் தொகை அனுப்பும் பணிகள் தொடங்கின.
சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு இத்திட்டத்தின் எதிர்காலம் குறித்து நிலவிய பல்வேறு ஐயங்களுக்கு இந்த நடவடிக்கை முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அரசின் இந்தத் தொடர் நடவடிக்கைக்குப் பெண்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளின் அடிப்படையில், மக்கள் நலன் சார்ந்த இத்திட்டங்கள் தடையின்றித் தொடரும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
