தமிழக சட்டப்பேரவையில் வரலாற்றுச் சாதனை; மாற்று சபாநாயகர் இருக்கையில் எம்.எல்.ஏ. சத்யபாமா!

 
sathyabama

 

தமிழக சட்டப்பேரவையின் மாற்றுப் பேரவைத் தலைவராகத் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த திருப்பூர் வடக்கு தொகுதி பெண் எம்.எல்.ஏ. சத்யபாமா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று முதன்முறையாகச் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து அவையை வெற்றிகரமாக வழிநடத்தியுள்ளார். தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த முக்கிய நிகழ்வு அரங்கேறியுள்ளது.

வழக்கமாகச் சட்டப்பேரவை நிகழ்வுகளைச் சபாநாயகர் வழிநடத்துவார் என்பதும், அவர் இல்லாத நேரத்தில் துணை சபாநாயகர் அவையை நடத்துவார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் ஆகிய இருவருமே அவையில் இல்லாத சூழ்நிலை ஏற்படும்போது, அவையைத் தடையின்றி நடத்துவதற்காக மாற்று தலைவர்கள் குழு அமைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், தற்போதைய சட்டசபையின் மாற்றுப் பேரவைத் தலைவர்கள் பட்டியலில் தவெக எம்.எல்.ஏ. சத்யபாமா இடம்பெற்றிருந்தார்.

இன்று சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் இருவரும் தற்காலிகமாக அவையில் இல்லாத நிலை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, மாற்றுப் பேரவைத் தலைவரான தவெக எம்.எல்.ஏ. சத்யபாமா சபாநாயகர் நாற்காலியில் சென்று அமர்ந்து அவைப் பணிகளைச் சிறப்பாகக் கையாண்டார். பெண் எம்.எல்.ஏ. ஒருவர் சபாநாயகர் நாற்காலியை அலங்கரித்து அவையை நடத்தியது அரசியல் வட்டாரத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.