விரைவில் மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 ஆக உயர வாய்ப்பு... இல்லத்தரசிகள் உற்சாகம்!
தமிழகத்தில் தகுதியுள்ள பெண்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000, மே மாதத்திற்கான தவணையாக இன்று (மே 15) பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வழக்கம்போல் வரவு வைக்கப்பட்டுள்ளது. தவெக ஆட்சி அமைந்தால் பெண்களுக்கு மாதம் 2,500 ரூபாய் வழங்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் அறிவித்திருந்த நிலையில், அதனை முழுமையாக நடைமுறைப்படுத்தச் சில கால அவகாசம் தேவைப்படுவதாகத் தெரிகிறது. இதன் காரணமாகவே, தற்போதைய நிலையில் பழைய நடைமுறையின்படி 1,000 ரூபாய் மட்டும் இன்று வரவு வைக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கு வழங்கப்பட வேண்டிய இந்தத் தொகை 2,500 ரூபாயாக உயர்த்தப்படுவதற்கு இன்னும் ஒரு சில மாதங்கள் ஆகலாம் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கான நிதி ஒதுக்கீடு மற்றும் புதிய வழிகாட்டுதல்களை உருவாக்கும் பணிகளில் அரசுத் துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இத்திட்டம் புதிய அரசின் கொள்கைகளுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்படும்போது, அதன் பெயரும் மாற்றப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக, கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மக்கள் நலத் திட்டங்கள் அனைத்தும் எவ்விதத் தடையுமின்றித் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்தில் உறுதி அளித்திருந்தார். அதன்படியே, இன்று காலை முதலே பெண்களின் வங்கிக் கணக்கிற்கு உரிமைத் தொகை அனுப்பும் பணிகள் சீராக நடைபெற்று வருகின்றன. அரசின் இந்தத் தொடர் நடவடிக்கையும், எதிர்காலத்தில் தொகை உயர்த்தப்படும் என்ற எதிர்பார்ப்பும் மகளிர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
