பட்ஜெட்டில் மகளிர் உரிமைத்தொகை ₹2,500 ஆக உயர்வு - அமைச்சர் மரிய வில்சன் தகவல்!

 
அமைச்சர் நா. மரிய வில்சன் அமைச்சர் நா. மரிய வில்சன்

தமிழகத்தில் புதிய அரசுப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, முந்தைய ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் தொடர்ந்து தொய்வின்றி வழங்கப்படும் என முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அறிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக, பெண்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மகளிர் உரிமைத் தொகையை உயர்த்துவது குறித்து நிதி அமைச்சர் நா. மரிய வில்சன் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புகழ்பெற்ற புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் இன்று தமிழக நிதி அமைச்சர் நா. மரிய வில்சன் சாமி தரிசனம் செய்து சிறப்புப் பிரார்த்தனை மேற்கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மகளிர் உரிமைத் தொகை குறித்துப் பேசுகையில், தற்போது குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1,000 உரிமைத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. இதனை ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்குவது குறித்த விரிவான நிதி ஒதுக்கீடுகள் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள், தமிழக அரசின் வரவிருக்கும் புதிய முழுமையான நிதிநிலை அறிக்கையில் முறைப்படி இடம்பெறும். மாநிலத்தின் உண்மையான பொருளாதார நிலைத்தன்மை குறித்து நுகர்வோர்கள் மற்றும் பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் புதிய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

மகளிர் உரிமைத் தொகை

தமிழக அரசின் தற்போதைய ஒட்டுமொத்த நிதி நிலைமை, கடன் சுமைகள் மற்றும் வருவாய் ஆதாரங்கள் குறித்த துல்லியமான 'வெள்ளை அறிக்கை' இன்னும் இரண்டு வாரங்களுக்குள் பொதுமக்களின் பார்வைக்கு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும். அதன் மூலம் பல நிதியியல் உண்மைகள் வெளிவரும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

தமிழக அரசின் இந்த மாதாந்திர உரிமைத் தொகைத் திட்டத்தில் முறைகேடுகள் நடப்பதாக எழுந்துள்ள புகார்களுக்கு அமைச்சர் விளக்கமளித்தார். தமிழகத்தைச் சேர்ந்த தகுதியுடைய ஏழை எளிய பெண்களுக்குச் சேர வேண்டிய இந்த உரிமைத் தொகை, சில இடங்களில் விதிமுறைகளை மீறி வட மாநிலத்தைச் சேர்ந்த பெண்களுக்கும் வழங்கப்பட்டு வருவதாக அரசுக்குக் கடுமையான புகார்கள் வந்துள்ளன. இது குறித்துத் தகுந்த ஆதாரங்களுடன் துறை ரீதியான தீவிர விசாரணை நடத்த தற்பொழுது உத்தரவிடப்பட்டுள்ளது. முறைகேடுகள் கண்டறியப்பட்டால் தகுதியற்ற நபர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

மகளிர் உரிமைத்தொகை

முதலமைச்சரின் உத்தரவின்படி தகுதியுடைய அனைத்துப் பெண்களுக்கும் மாதம் ரூ.2,500 உரிமைத் தொகை தடையின்றிச் சென்றடைவதை அரசு முழுமையாக உறுதி செய்யும் என நிதி அமைச்சர் தனது பேட்டியில் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.