மகளிர் பிரீமியர் லீக் ஜனவரி 14-ல் தொடக்கம், அக்.28-ல் கொச்சியில் மினி ஏலம்!

 
மகளிர் பிரீமியர் லீக்

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 5-வது பருவம் குறித்த அதிகாரப்பூர்வ அட்டவணை மற்றும் ஏல விவரங்களை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது.

வரவிருக்கும் மகளிர் பிரீமியர் லீக் 2027 தொடரானது ஜனவரி 14 முதல் பிப்ரவரி 7, 2027 வரை நடைபெறவுள்ளது. மகளிர் கிரிக்கெட்டின் மாபெரும் டி20 திருவிழாவாக விளங்கும் இத்தொடர், சர்வதேச மற்றும் உள்நாட்டு வீராங்கனைகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்த முக்கியமான களமாக உள்ளது.

மகளிர் பிரீமியர் லீக்

நடப்பு அணிகள் தாங்கள் தக்கவைத்துக் கொள்ளும் வீராங்கனைகளின் இறுதிப் பட்டியலைச் சமர்ப்பிக்க செப்டம்பர் 28, 2026 கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய பருவத்திற்கான வீராங்கனைகள் மினி ஏலம் அக்டோபர் 28, 2026 அன்று கொச்சியில் உள்ள கிராண்ட் ஹயாத் ஹோட்டலில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. கடந்த சீசனில் மெகா ஏலம் நடைபெற்ற நிலையில், இந்த முறை மினி ஏலம் மட்டுமே நடத்தப்படுகிறது.

ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 18 வீராங்கனைகளைக் கொண்டிருக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அணிகளுக்கான ஒட்டுமொத்தச் சம்பள வரம்பு ரூ.15 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வீராங்கனைகளைத் தக்கவைப்பதில் சிறப்பு வரம்புகள் எதுவும் விதிக்கப்படவில்லை.

T20 World Cup: 5வது லீக் போட்டி, ஸ்காட்லாந்து – பப்புவா நியூ கினியா மோதல்

கடந்த மகளிர் பிரீமியர் லீக் 2026 தொடரின் இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதற்கிடையே, மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக இருந்த லிசா கீட்லி விலகியுள்ளதால் புதிய பயிற்சியாளர் நியமிக்கப்பட உள்ளார். மேலும், யூபி வாரியர்ஸ் அணியின் புதிய தலைமை ஸ்கவுட்டாக முன்னாள் வீராங்கனை நீது டேவிட் நியமிக்கப்பட்டுள்ளார்.