மகளிர் உரிமைத் தொகை.. தகுதியற்ற பயனாளிகளை நீக்க அரசு நடவடிக்கை!
தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தில், உதவித்தொகையை ரூ.2,500-ஆக உயர்த்தக் கோரிக்கைகள் எழுந்து வரும் வேளையில், விதிமுறைகளை மீறித் தவறான தகவல்கள் மூலம் பயன் பெற்று வருவோரைக் கண்டறிந்து நீக்கும் பணிகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றுபவர்களின் குடும்பத்தினர், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்களைத் தவிர்த்து, பிற உள்ளாட்சி மற்றும் மாநகராட்சி மக்கள் பிரதிநிதிகளின் குடும்பத்தினர், ஆண்டு வருமானம் ₹2.5 லட்சத்திற்கு மேல் உள்ளவர்கள் மற்றும் வருமான வரி/தொழில் வரி செலுத்துவோர், சொந்த பயன்பாட்டிற்காகக் கார், ஜீப், டிராக்டர் போன்ற நான்கு சக்கர வாகனங்களை வைத்திருக்கும் குடும்பங்கள் ஆகிய தகுதியற்ற நபர்களைக் கண்டறிந்து பட்டியலிலிருந்து நீக்குவதன் மூலம், உண்மையான ஏழை, எளிய மற்றும் விளிம்புநிலை மக்களுக்கு இத்திட்டத்தின் பலன்கள் முழுமையாகச் சென்று சேருவதை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தகுதியுடைய புதிய விண்ணப்பதாரர்கள் e-Sevai portal வாயிலாக மேல்முறையீடு செய்யவோ அல்லது விண்ணப்பிக்கவோ வழிவகை செய்யப்பட்டுள்ளது.
